6 மாதத்தில் வங்கிகளின் ரூ.42,035 கோடி வாராக் கடன்!
இந்த நிதி ஆண்டில் முதல் 6 மாதத்தில் பொதுத் துறை வங்கிகளின் ரூ.42,035 கோடி வாராக் கடன் வங்கிகளின் கடன் கணக்குப் பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாராக் கடனை ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை வசூலிக்க முடியாவிட்டால், அதனை வங்கிகள் தங்கள் கடன் கணக்குப் பதிவில் இருந்து நீக்குவது வழக்கமாக கடைபிடிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகும். அதற்காக இந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அர்த்தம் இல்லை. கடனை திரும்ப வசூலிக்க தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வங்கி நிர்வாகக் காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது தொடர்பாக நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் நேற்று அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியது:-
பாரத ஸ்டேட் வங்கி ரூ.8,312 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.8,061 கோடி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா ரூ.6,344 கோடி, பாங்க் ஆப் பரோடா ரூ.5,925 கோடியை கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் கடன் கணக்குப் பதிவில் இருந்து நீக்கியுள்ளன.
அனைத்து பொதுத் துறை வங்கிகளும் சேர்த்து மொத்தம் ரூ.42,035 கோடியை கடன் கணக்குப் பதிவில் இருந்து நீக்கியுள்ளன.அந்த 6 மாத காலகட்டத்தில் ரூ.37,253 கோடி வாராக் கடன் திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023–24 நிதி ஆண்டில் பொதுத் துறை வங்கிகள் ரூ.1.14 லட்சம் கோடி கடனை கடன் கணக்குப் பதிவில் இருந்து நீக்கி உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.