For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அரசு கலை கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் பணி வாய்ப்பு- முழு விபரம்!

10:01 AM Mar 14, 2024 IST | admin
அரசு கலை கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் பணி வாய்ப்பு  முழு விபரம்
Advertisement

மிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர் உள்ளிட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை, அப்பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் மாதம், போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் மாதம் ஆகியவை குறித்த விவரங்கள் கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் நாள் வெளியிடப்பட்டன. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்படும்.

Advertisement

அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இது குறித்த அறிவிக்கையை எதிர்பார்த்து தகுதியுடைய தேர்வர்கள் காத்திருந்தனர். ஆனால், பிப்ரவரி நிறைவடைந்து மார்ச் மாதத்தில் இரண்டாவது வாரமும் பிறந்து விட்ட நிலையில் அறிவிக்கை வெளியாகாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்து இருந்தனர்.

Advertisement

தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 10,079 ஆகும். இவற்றில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் ஏறத்தாழ 75% ஆகும். இவ்வளவு காலியிடங்களை வைத்துக் கொண்டு அரசுக் கல்லூரிகளில் தரமான உயர்கல்வியை எவ்வாறு வழங்க முடியும்? என்பதை அரசு தான் விளக்க வேண்டும். என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் கேள்விக் கேட்ட நிலையில்தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

ஆங்கிலத் துறையில் 656, தமிழ் துறையில் 569 உள்பட 65 துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.65 துறைகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. வரும் 28ம் தேதி முதல் ஏப். 29 வரை உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், "தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் 🎓பணியிடங்களுக்கு வரும் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 5 மணி வரை, www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், இந்த அறிவிப்பின் மூலம் 3 ஆயிரத்து 921 நடப்பு காலிப் பணியிடங்கள் மற்றும் 79 பின்னடைவு காலி பணியிடங்கள் என மொத்தம் 4 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பம் செய்ய தகுதியுடையவர்கள்:

🎓தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு முறைப்படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

🎓ஜூலை 1, 2024ல் 57 வயது முடியாதவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

🎓பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறையின் படியும், உயர் கல்வித் துறையின் அரசாணையின் அடிப்படையில், நெட் (NET-National Eligibility Test) அல்லது செட் (SET- State Eligibility Test) தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

🎓தமிழ் மொழியை பாடமாக எடுத்து படிக்காமல், பிற மொழி எடுத்து படித்தவர்கள் தமிழ் மொழி தேர்வில் பணி நியமனம் செய்யப்பட்ட இரண்டு ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

🎓உயர் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தது போன்று, கௌரவ விரிவுரையாளர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளதால், அவர்கள் பணி அனுபவச் சான்றுகளை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

🎓கலை பாட பிரிவுகள், வணிகவியல், மானுடவியல், கல்வியியல், சமூக அறிவியல், அறிவியல், உடற்கல்வி, இயல், இதழியல் மற்றும் தொடர்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணி நியமனம் செய்யப்படுபவார்கள்.

தேர்வு முறை:

உயர் கல்வித் துறை, அரசாணை அடிப்படையில் எழுத்துத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் எனவும் நேர்முகத் தேர்விற்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. முதுகலை பாடங்களில் இருந்து போட்டி தேர்வு கேள்விகள் இடம் பெறும்.

தாள் ஒன்றில் மூன்று மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. அதில், பகுதி ஒன்றில் தமிழ் பாடத்தில் 25 மதிப்பெண்கள், பொது அறிவு 25 மதிப்பெண்கள் என மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெறும். பகுதி இரண்டில் இரண்டு மணி நேரத்திற்கு 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தாள் இரண்டில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து நேர்காணலுக்கு 30 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.

மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு, உயர் கல்வித் துறையின் அரசாணையின்படி, அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement