இராமர் கோவிலால் உபி-க்கு நான்கு லட்சம் கோடி வருமானமா? சும்மா அள்ளி விடுறாங்க…!
உத்தரப்பிரதேசத்திலுள்ள இராமர் கோவிலுக்கு ஐந்து கோடி பக்தர்கள் சென்றால், அதன்மூலம் உபி அரசுக்கு ரூபாய் நான்கு லட்சம் கோடி வருமானம் கிடைக்குமென்று டமில்நாட் அண்ணாமலை சொல்லுகிறார்.
ஆண்டுக்கு ஐந்து கோடிப்பேர் என்றால் ஒரு நாளைக்குச் சராசரியாக 1,37,000 பக்தர்கள் செல்ல வேண்டும். ஐந்து கோடிப்பேரும் ஆளுக்கு 30,000 ரூபாய் செலவு செய்து போய் வந்தால்கூட ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்தான் பக்தர்களுக்கே செலவாகும்.
அது எப்படி உபி அரசுக்கு நான்கு லட்சம் கோடி ரூபாய் வருமானத்தைக் கொடுக்கும்? அந்த ஒன்றரை லட்சம் கோடியும் பக்தர்களுக்கான செலவுதானே தவிர, உபி அரசுக்கான வருமானமல்லவே!
கொஞ்சமும் கூச்சப்படாமல், இப்படி பொய்யான புள்ளி விவரங்களை அள்ளி உருட்டுவதை எப்போதுதான் நிறுத்தப் போகிறார்களோ?
அதாகப்பட்டது சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரவள்ளூர் பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நேற்று (பிப்ரவரி 15) நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “5 கோடி பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வதன் மூலம், உத்திரப் பிரதேச மாநிலத்திற்கு அடுத்த ஆண்டில் ரூ.4 லட்சம் கோடி வருமானம் வரும் என்றும், வரி வருமானம் மட்டுமே ரூ.25,000 கோடி அம்மாநில அரசுக்கு வரும் என்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஆய்வு குழு கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனப் பேசியுள்ளார். இதனை தனது எக்ஸ் பக்கத்திலும் பதிவாக வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலை கூறியது போன்று அயோத்தி ராமர் கோவிலினால் உத்திரப் பிரதேசத்திற்கு அடுத்த ஆண்டில் ரூ.4 லட்சம் கோடி வருமானம் வரும் என்று SBI ஏதாவது அறிக்கை வெளியிட்டுள்ளதா என்பது தொடர்பாக ஆய்வு செய்து பார்த்தோம். Business Standard இது தொடர்பாக கடந்த மாதம் 24 அன்று “ராமர் கோயில் திறப்பு: உ.பி.யில் சுற்றுலாப் பயணிகளின் மொத்த செலவு இந்த ஆண்டில் ரூ.4 டிரில்லியனைத் தாண்டும்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், எஸ்பிஐ-யின் ECOWRAP அமைப்பு இந்த தரவுகளை மதிப்பிட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே எஸ்பிஐ-யின் ECOWRAP பற்றியும், இது வெளியிட்டுள்ள அறிக்கை குறித்தும் தேடியதில், ஜனவரி 21 அன்று “லத்தீன் அமெரிக்கா ஸ்காண்டிநேவியாவை சந்திக்கும் இடம்: இரட்சிப்புக்கான பாதை உத்தரப் பிரதேசம் வழியாக செல்கிறது” (“WHERE LATIN AMERICA MEETS SCANDINAVIA: THE ROAD TO SALVATION PASSES THROUGH UTTAR PRADESH”) என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
அதில், “2022 ஆம் ஆண்டில், 32 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் உ.பிக்கு வருகை தந்தனர் (இதில் 2.21 கோடி சுற்றுலாப் பயணிகள் அயோத்தியாவில் மட்டும்), கிட்டத்தட்ட 200% அதிகரித்துள்ளது. NSS வழங்கும் செலவினத்தின் அடிப்படையில் (அனைத்து இந்திய அளவில்), உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த செலவு சுமார் ரூ.2.2 லட்சம் கோடி ஆகும். உ.பி.யில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் செலவு செய்த ரூ.10,000 கோடியையும் சேர்த்து, உ.பி.யில் சுற்றுலாப் பயணிகளின் மொத்தச் செலவு ரூ.2.3 லட்சம் கோடி.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டதையும், சுற்றுலாவை மேம்படுத்த உ.பி அரசு எடுத்துள்ள முயற்சிகளையும் கருத்தில் கொண்டு உ.பி.யில் சுற்றுலா பயணிகளின் மொத்த செலவு இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.4 லட்சம் கோடியை தாண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். சுற்றுலாப் பயணிகளின் பெருக்கத்தின் காரணமாக உ.பி அரசு ரூ.20,000-25,000 கோடி கூடுதல் வரி வருவாயைப் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், 5 கோடி பக்தர்கள் அயோத்தியா கோயிலுக்கு செல்வதன் மூலம் 4 லட்சம் கோடி வருமானம் வரும் என எங்கும் குறிப்பிடவில்லை.