For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

3 புதிய கிரிமினல் சட்டங்கள் அமலுக்கு வந்துடுச்சு!

06:50 PM Jul 01, 2024 IST | admin
3 புதிய கிரிமினல் சட்டங்கள் அமலுக்கு வந்துடுச்சு
Advertisement

ம் நாட்டை 1858 முதல் 1947 வரை ஆட்சி செய்த பிரிட்டிஷார், 1860- ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தை அமல்படுத்தினர். நாடு சுதந்திரம் அடைந்து குடியரசான பிறகும், ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த சட்டங்களில் அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்பட்டு, அவையே நடைமுறையில் இருந்தன. இந்த சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்த மத்திய அரசு, 2020- ஆம் ஆண்டு குற்றவியல் சட்ட சீர்திருத்த குழுவை அமைத்தது. அந்த குழுவின் பரிந்துரையின்படி உருவாக்கப்பட்ட புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை கடந்தாண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, மத்திய அரசு நிறைவேற்றியது. பின்னர், குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு, கடந்த டிசம்பர் மாதமே அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதை அடுத்து மூன்று புதிய கிரிமினல் சட்டங்கள் இன்று முதல் (திங்கள், ஜூலை 1) நடைமுறைக்கு வந்திருக்கின்றன. இந்தச் சட்டங்களின் பல பிரிவுகளுக்கு வழக்கறிஞர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

Advertisement

தற்போது மூன்று கிரிமினல் சட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

Advertisement

அதாவது 1860-ஆம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்டம் (IPC). இந்தச் சட்டம் தற்போது பாரதீய நியாய சன்ஹிதா (BNS) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

1973-ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக (CrPC) பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

1872-ஆம் ஆண்டின் இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. புதிய சட்டங்கள் அனைத்தும் 2023ஆம் ஆண்டில் இயற்றப்பட்டவை.

இந்தப் புதிய சட்டங்கள் எல்லாமே இந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் செய்யப்படும் குற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், அதற்கு முந்தைய குற்றங்களுக்கு பழைய சட்டத்தின்படியே வழக்குகள், விசாரணைகள் நடக்கும். இதனிடையே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 348வது பிரிவு, சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் எனக் கூறுகிறது ஆனால், இந்த மூன்று சட்டங்களுக்கும் இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளன. இதற்கு கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ஆனாலும் இதில் பாரதிய நியாய சன்ஹிதா என்ற தண்டனை சட்டத்தின் கீழ், டெல்லியில் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரி ஒருவர் சட்டவிரோதமாக தண்ணீர் மற்றும் குட்கா விற்றதாக முதல் தகவல் அறிக்கையை டெல்லி காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அந்த கடையை அகற்றுமாறு பலமுறை கூறியும், அந்த வியாபாரி ஒத்துழைக்காததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் வழக்குகளில் 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரணை முடித்த 45 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். நீதிமன்றங்கள் தேவையின்றி வழக்கை ஒத்தி வைக்கக்கூடாது, சாட்சிகளை பாதுகாக்க அனைத்து மாநில அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும்.

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை பெண் காவல் அதிகாரி மற்றும் பாதிக்கப்பட்டவரின் உறவினர் முன்னிலையில் பதிவு செய்ய வேண்டும். ஏழு நாட்களுக்குள் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

குழந்தையை வாங்குவதும் விற்பனை செய்வதும் கடும் அபராதம் மற்றும் தண்டனைக்கு உள்ளாக்கப்படும்.

சிறார் மீதான கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படக்கூடும்.

கும்பலாக சேர்ந்து கொலை செய்தல், வன்கொடுமை செய்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு வந்தது.

மேற்சொன்ன குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

சிறிய அளவிலான திருட்டு, குடி போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு புதிய சட்டத்தின்படி சமூக சேவை செய்யும் வகையில் உத்தரவிடப்படும்.

ஜீரோ எஃப்ஐஆர் முறையும் இதன் மூலம் அறிமுகமானது. அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு காவல் நிலையத்திலும் தனிநபர்கள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய புதிய சட்டம் அனுமதிக்கிறது.

Tags :
Advertisement