2K லவ் ஸ்டோரி - விமர்சனம்!
இந்த பிரபஞ்சத்தில் ஒரு பெண், ஆணோடு பழகினால் காதலாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. நல்ல நட்பாகவும் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் நேரும் தவிர்க்கவே இயலாத இத்தகைய உறவு எவ்வளவு மகத்துவம் வாய்ந்ததோ அதற்கு நேரெதிராக சிக்கலானதும் கூட. ஆண் - பெண் உறவுச்சிக்கலின் காரணிகள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே இருப்பவை; தொடர்ந்து நிலைத்திருப்பவையும் கூட. இந்த உறவு குறித்த தொடர்ச்சியான உரையாடல்கள் வழியான தெளிவை உண்டாக்குவது எக்காலத்துக்கும் தேவையான ஒன்றே. அந்த வகையில் இந்த நட்புக்கும் காதலுக்குமான மெல்லிய கோட்டை பூதாகரமாகக் காட்டி தமிழில் கூட கடந்த 1981இல் வெளியான பாலைவனச்சோலை தொடங்கி விக்ரமன் டைரக்ஷனில் ரிலீஸான புது வசந்தம் , மாதவன், ஜோதிகா நடிப்பில் வெளியான பிரியமான தோழி போன்ற படங்கள் பாணியில் '2K லவ் ஸ்டோரி' என்ற டைட்டிலில் ஒரு படத்தை வழங்கியுள்ளார் டைரக்டர் சுசீந்தரன். இப்படி நவீன கால இளசுகள் காதல் கதை என்றவுடன் வழக்கமாக கோலிவுட்வாசிகள் கோர்த்து விடும் குடி,கூத்து, டேட்டிங், மட்டமான சிந்தனையுடன் பேசும் வார்த்தைகள் எதுவும் இல்லாமல் நீட்டான ஃபிலிமாக கொடுத்திருப்பதற்கே தனி பாராட்டு விழா நடத்தலாம்.
அதாவது கார்த்தியும், மோனிகாவும் குழந்தையாக இருந்தது முதல் பருவம் வரை நண்பர்களாக பழகி வருகிறார்கள். இருவரும் கல்லூரியில் விஸ்காம் படித்து விட்டு சேர்ந்து 'ப்ரி வெட்டிங் ஃபோட்டோஷூட்' நடத்துகின்றனர். ஒரு சூழலில் பவித்ரா என்ற பெண் என்ட்ரி ஆகி கார்த்தியை காதலிப்பதாக சொல்கிறார். இதை தனது ஃப்ரண்ட் மோனிகாவிடம் கலந்து பேசி விட்டு பவித்ராவுக்கு ஒகே சொல்கிறார் கார்த்தி. ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு ஆக்சிடெண்டில் பவித்ரா இறந்து விடுகிறார். இதை அடுத்து இருவரின் நட்பும் உறவுகளும் மோனிகாவும், கார்த்தியும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேசுகிறது. ஆனால் இந்த ஸோ கால்ட் 2K கிட்ஸ் என்ன முடிவு செய்தார்கள் என்பதுதான் இப்படக் கதை.
ஹீரோ கார்த்திக் ஜெகவீர்; லுக் எல்லாம் ஓகேதான். ஆனால் நட்பா காதலா என்ற சூழ்நிலை வரும்போது குழம்பித் தவிக்காமல் முடிவெடுப்பது, தோழிக்காக வரன் தேடுவது என உணர்வுபூர்வமாக வெளிப்பட வேண்டிய காட்சிகளின் கனத்தை புரியாமல் பேக்குத்தனமான எக்ஸ்பிரஸன்ஸ் மட்டும் கொடுத்தாலும் மோசமில்லை.. கொஞ்சம் நடிப்பு பயிற்சி எடுத்தால் அவருக்கு நல்லது. படத்தின் பலமான நாயகி மோனியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜனுக்கு இனி கொஞ்ச காலத்திற்கு கோலிவுட்டில் ஒரு இடமுண்டு.ஆண்டுக்கணக்கில் பழகியவன் சட்டென இன்னொரு பெண்ணுடன் பழகுவதைப் பார்க்கும் போது துளிர்க்கும் பொஸசிவ்னஸை கேஷூவலாக எக்ஸ்போஸ் செய்வதாகட்டும், ஃப்ரண்ட்ஷூப்புக்கும் லவ்வுக்குமான டிப்ரண்ட்டை புரிந்து நண்பனையும் அவனது காதலியையும் ஒரு டிரிப்புக்கு ஹேப்பியாக வழி அனுப்பி வைப்பது தொடங்கி தன் நண்பனின் காதலி மரணத்தால் மனமுடைந்து போனவனை தேற்றுவது வரை கிடைத்த ரோலின் கனம் அறிந்து வலு சேர்த்து கவனன் ஈர்க்கிறார். ஹீரோவின் லவ்வராக வரும் லத்திகா பாலமுருகனின் கண்கள் மட்டுமே தனியா மிளிர்வது அழகு.
ஜெகவீர், மீனாட்சி ப்ரண்டாக வரும் பால சரவணன் அடிக்கும் பஞ்ச் கொஞ்சூண்டு சிரிப்பை ஏற்படுத்தி ஏமாற்றமளிக்கிறது. பால.சரவணன் தனக்கு உரிய பங்களிப்பில் இன்னும் கவனம் செலுத்துவது நலம். சிங்கம்புலி சக கோஷ்டிகளுடன் திருமண வீட்டில் புகுந்து செய்யும் கலாட்டா எடுபடுகிறது. ஜிபி முத்துவுக்கு பேண்ட் சட்டை மாட்டிவிட்டு யார்ரா இந்த புது காமெடியன் என்று யோசிக்க வைத்திருக்கிறார்கள். அவருக்கு ரெகுலர் காஸ்டியூமான வேஷ்டி சட்டையை போட்டு அவரது ஒரிஜினல் யூடியூப் டயலாக்கை பேச வைத்திருந்தால் கூடுதல் பிளாசாக இருந்திருக்கும். 90கள் கிட்ஸாக வரும் டைரக்டர் அந்தோணி பாக்யராஜ் பலே சொல்ல வைத்து விடுகிறார்.
மியூசிக் டைரக்டர் டி.இமானின் இசையில் பாடல்கள் பெட்டர் ரகமே. கூடவே பின்னணி இசை திரைக்கதைக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது. கேமராமேன் ஆனந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு வண்ணமயமாகவும் கொண்டாட்ட மனநிலையிலும் அமைந்து காட்சிகளுக்கு இனிமை சேர்த்திருக்கிறது.
ஹைடெக்காகி விட்ட இன்றைய சமூகத்தில் ஆணும் பெண்ணும் நட்பு கொள்வதை இன்னும் ஏற்றுக் கொள்ளாத பழமைவாதிகள்தான் அதிகம். இதில் கல்வி கற்றவர், கல்லாதவர் என்ற பிரிவெல்லாம் கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால்… படித்தவர்களை விட படிக்காதவர்கள் ஆண் பெண் நட்பை நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர்.இச்சூழலில் இளம் தலைமுறையினரின் வாழ்க்கை முறையையையும், பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களையும் மேலே சொன்ன நெருடல் இல்லாமல் சுசீந்திரன் வைத்திருக்கும் சின்ன சின்ன டுவிஸ்ட்டுகள் படத்துக்கு லைக் போட்டு பெல் ஐகானை தட்ட வைத்து விட்டார்.
ஜி.தனஞ்ஜெயன் வெளியிட்டுள்ள -2k லவ் ஸ்டோரி – இன்றைய இளசுகளின் அனுமன் மனசு
மார்க் 3.25/5