உத்தரப்பிரதேச மாநிலத்தில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் உயிரிழப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா மாவட்டம் ஜெய்தாரா கிராமத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் கங்கை நதியில் நீராடுவதற்காக காதர்கஞ்ச் நோக்கி டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். கதாய் கிராமம் அருகே சென்ற ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த டிராக்டர் அப்பகுதியில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 22 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 20க்க்கும் மேற்பட்டடோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த பக்தர்கள் 'மக பூர்ணிமா' விழாவில் புனித நீராடுவதற்காக கங்கை நதிக்கு சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து அறிந்து அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000ம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உள்ளூர் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினார்.