டிரம்ப்புக்கு 22 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு - மெட்டா நிறுவனம் ஒப்புதல்!
அமெரிக்காவில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றார். அப்போது, தோல்வியை தழுவிய டிரம்ப், அதனை ஏற்க முடியாமல், தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்.
மேலும், தனது பேச்சை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார். அவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள், ஜோ பிடன் அதிபராக பதவி ஏற்க இருந்த தலைமை செயலக கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, டிரம்ப்பின் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டா அதிகாரப்பூர்வ கணக்குகள் முடக்கப்பட்டன.
தன் மீது அவதூறு சுமத்தி, தன்னுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி விட்டதாக டிரம்ப் வழக்கு தொடர்ந்தார். தற்போது அவர் மீண்டும் அதிபரான நிலையில், இந்த வழக்கில் பணிந்து போக மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கணக்கை முடக்கியதால் பாதிக்கப்பட்ட டிரம்ப்புக்கு 22 மில்லியன் டாலர் நிவாரணம் வழங்க மெட்டா முன்வந்துள்ளது. இது, இந்திய மதிப்பில் 190 கோடி ரூபாய் ஆகும். இது தொடர்பாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. மார்க் ஜூகர்பெர்க் தரப்பு வக்கீல், கலிபோர்னியா கோர்ட்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘இருதரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டு விட்டதால், இந்த வழக்கை விரைவில் முடித்துக் கொள்கிறோம்’ எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தொகை தொடர்பாக எந்த விபரமும் குறிப்பிடவில்லை.