நோபல்:இலக்கியத்திற்கான பரிசை வென்றார் தென்கொரியா பெண் எழுத்தாளர் ஹான் காங்!
சர்வதேச அளவில் அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன.அதன்படி, மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு ஒழுங்கு முறை சிகிச்சைக்குப் பிறகு மைக்ரோ ஆர்.என்.ஏ. என்ற செல்லின் செயல்பாடு குறித்த ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்ட உள்ளது. அதேபோன்று, இயற்பியலுக்கான நோபல் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட், கனடாவைச் சேர்ந்த ஜியோஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பெக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் எம். ஜம்பர் 3 பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புரதம் வடிவமைப்பு, கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக மூவரும் நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்வின் நுட்பங்களை எடுத்துரைக்கும் கவிதைகளுக்காக ஹான் காங்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுரீதியான மனவடுக்களையும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தக்கூடியதுமான கவித்துவ உரைநடை இவருடையது என்று நோபல் குழு பாராட்டியுள்ளது.அவர் தன் படைப்புகளில் கண்ணுக்குத் தெரியாத வாழ்க்கையின் விதிகளைக் கையாள்கிறார் என்றும் மனித உடலுக்கும் மனதுக்கும் வாழ்வுக்கும் இறப்புக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆழ்ந்த உணர்வு கொண்டவராக இருக்கிறார் எனவும், அவருடைய கவித்துவமான, சோதனை முயற்சியிலான பாணி, சமகால உரைநடை இலக்கியத்தில் புதிய திறப்பாக அமைந்துள்ளது என்றும் நோபல் குழு பாராட்டியுள்ளது.
அடிசினல் ரிப்போர்ட்:
ஹான் காங் தென் கொரியாவின் குவாங்ஜுவில் 1970 இல் பிறந்தார். அவர் இலக்கியப் பின்னணியில் இருந்து வந்தவர், அவரது தந்தை ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆவார்.1993 ஆம் ஆண்டு முன்ஹக்-க்வா-சாஹோ (இலக்கியம் மற்றும் சமூகம்) குளிர்கால இதழில் "சியோலில் குளிர்காலம்" உட்பட ஐந்து கவிதைகளை வெளியிட்டதன் மூலம் ஒரு கவிஞராக தனது இலக்கிய அறிமுகத்தை மேற்கொண்டார் ஹான் காங். அடுத்த ஆண்டு "ரெட் ஆங்கர்" எனும் நாவலுக்காக 1994 சியோல் ஷின்முன் வசந்த இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்று நாவலாசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து பல நாவல், கவிதை, சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார். ஹான் காங் 2016 ஆம் ஆண்டு 'தி வெஜிடேரியன்' நாவலுக்காக சர்வதேச புக்கர் பரிசை வென்றார். அவரது மிகச் சமீபத்திய நாவலான 'ஐ டூ நாட் பிட் ஃபேர்வெல்' 2023 இல் பிரான்சில் மெடிசிஸ் பரிசையும், 2024 இல் எமிலி குய்மெட் பரிசையும் பெற்றது.