தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வங்கதேசத்தில் 19 ஆயிரம் இந்தியர்கள்! -மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

07:28 PM Aug 06, 2024 IST | admin
Advertisement

ங்க நாட்டில் நிலைமை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ராணுவம் அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றியது. அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா தப்பி வந்துள்ளார். இந்தியாவில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனா, பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்த விவகாரம் குறித்தும், வங்கதேச கலவரம் குறித்தும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மாநிலங்களவியில் விளக்கம் அளித்தப் போது வங்கதேசத்தில் 19 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 9 ஆயிரம் பேர் மாணவர்கள். வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் நிலை குறித்து நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தற்போதைய வங்கதேச நிலைமை குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று மாநிலங்களவையில் கூறியதாவது:

Advertisement

“இந்தியா - வங்கதேச உறவு என்பது மிகவும் நெருக்கமானது. இந்த நெருக்கம் பல பத்தாண்டுகளாகவும், பல அரசுகளுக்கு இடையேயும் இருந்து வருகிறது. சமீபத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை அங்கு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜனவரி 2024-ல் வங்கதேசத்தில் தேர்தல் நடந்ததில் இருந்து குறிப்பிடத்தக்க அளவிலான பதற்றம், ஆழமான பிளவுகள் வங்கதேச அரசியலில் ஏற்பட்டன. இந்தப் பின்னணியில் மாணவர்கள் போராட்டம் ஜூன் மாதம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தின்போது வன்முறைகள் ஏற்பட்டன. பொதுக் கட்டிடங்கள், கட்டமைப்புகள் தாக்கப்பட்டன. இந்த வன்முறை ஜூலை முழுவதும் தொடர்ந்தது. பேச்சுவார்த்தை மூலம் நிலைமையை தணிக்க நாம் ஆலோசனை வழங்கினோம்.

நம்மோடு தொடர்பில் இருக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளிடமும் இதை வலியுறுத்தினோம். ஜூலை 21 அன்று வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போராட்டத்தை தீவிரப்படுத்தின. இந்தப் போராட்டம் ஒரே ஒரு இலக்கை கொண்டிருந்தது. அது, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்பதுதான். ஆகஸ்ட் 4-ம் தேதி நடந்த போராட்டங்களின்போது காவல் துறையினர் தாக்கப்பட்டனர். காவல் நிலையம், அரசு கட்டிடங்கள் உள்ளிட்டவையும் தாக்கப்பட்டன. வன்முறை மிகவும் தீவிரமடைந்தது. ஆட்சியாளர்களோடு தொடர்புடைய தனிநபர்களின் சொத்துக்கள் நாடு முழுவதும் குறிவைக்கப்பட்டன. மிகவும் குறிப்பிடத்தக்க கவலை என்னவென்றால், சிறுபான்மையினரின் வணிகம் மற்றும் கோயில்கள் நாட்டின் பல்வேறு இடங்களிலும் தாக்குதலுக்குள்ளாகின.

ஆகஸ்ட் 5-ல் என்ன நடந்தது? - நமது புரிதல் என்னவென்றால், வங்தேசத்தின் பாதுகாப்பு கட்டமைப்புகளின் தலைவர்களோடு ஆலோசனை நடத்திய பிரதமர் ஷேக் ஹசீனா, அதனைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினமா செய்ய முடிவு செய்தார். ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வர விரும்புவதாகவும், உடனடியாக அனுமதிக்குமாறும் மிக குறுகிய கால அவகாசத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதே நேரத்தில், விமானம் இந்தியாவுக்குள் வருவதற்கான அனுமதியை அதற்கான அதிகாரிகள் கோரினர். இதையடுத்து நேற்று மாலை அவர் டெல்லி வந்தடைந்தார்.வங்கதேசத்தில் நிலைமை தொடர்ந்து பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது. ராணுவத் தலைமைத் தளபதி ஆகஸ்ட் 5-ம் தேதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். பொறுப்பை ஏற்பதாகவும், இடைக்கால அரசை அமைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களோடு நமது அரசு நமது தூதரகங்கள் மூலம் நெருக்கமான தொடர்பில் இருக்கிறது. 19 ஆயிரம் இந்தியர்கள் அங்கு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 9 ஆயிரம் பேர் மாணவர்கள். மாணவர்களில் பலர் கடந்த ஜூலை மாதமே இந்தியாவுக்கு திரும்பினர்.

வங்கதேசத்தில் உள்ள நமது தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களுக்கு புதிய அரசு உரிய பாதுகாப்பை வழங்கும் என்பது நமது எதிர்பார்ப்பு. நிலைமை சீரடைந்ததும் அவை வழக்கமான முறையில் செயல்படும். வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் நிலை (பெரும்பாலும் இந்துக்கள்) குறித்து நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் நலத்துக்காக பல்வேறு குழுக்கள் செயல்பட்டு வருவதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. நாம் அதை வரவேற்கிறோம்.

வங்கதேசத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை மேம்பட வேண்டும் என்ற கவலையை நாம் தெரிவித்துக்கொள்கிறோம். நமது எல்லைப் படைகளும் விதிவிலக்கான முறையில் உஷாராக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் டாக்காவில் உள்ள அதிகாரிகளோடு நாம் தொடர்பில் இருக்கிறோம். இதுதான் தற்போதைய நிலை. நமது நெருங்கிய அண்டை நாடான வங்கதேசத்தில் நிலைமை மேம்படவும், இயல்புநிலை திரும்பவும் இந்த அவை தனது ஆதரவை வழங்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

Tags :
BangladeshCentral MinisterindiansJaishankarPMriots
Advertisement
Next Article