For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தடுப்பூசியே செலுத்தாத 16 லட்சம் இந்தியக் குழந்தைகள்: யுனிசெப் ரிப்போர்ட்!

01:50 PM Jul 17, 2024 IST | admin
தடுப்பூசியே செலுத்தாத 16 லட்சம் இந்தியக் குழந்தைகள்  யுனிசெப் ரிப்போர்ட்
Advertisement

வ்வொரு குழந்தை பிறந்ததில் தொடங்கி, 18 வயதை அடையும் வரை பல்வேறு கால கட்டங்களில் உரிய தடுப்பூசிகளைப் போட வேண்டும் என்பது, உலகின் பல நாடுகளிலும் அரசால் அறிவுறுத்தப்படும் நடைமுறைகளில் ஒன்று. தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் சிலருக்கு இன்னமும் தயக்கம் உள்ளது. தடுப்பூசி செலுத்துவதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா, இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கும்போது தடுப்பூசி ஏன் செலுத்த வேண்டும் என்பது போன்ற சந்தேகங்களுடன் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் அலட்சியமாக உள்ளனர்.

Advertisement

பொதுவாக காசநோய், இளம்பிள்ளை வாதம், கல்லீரல் தொற்று, கக்குவான் இருமல், இன்ஃப்ளூயன்ஸா தொற்று, நிமோனியா காய்ச்சல், ரண ஜன்னி, தட்டம்மை நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (Flavivirus), ரூபெல்லா நோய் மற்றும் வயிற்றுப் போக்கு (Rota virus) என்று தடுப்பூசி அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 11 நோய்களுக்கு, இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி இருந்தாலும், வைரஸின் தாக்கத்தை எதிர்ப்பதற்கு ஒரு மருந்து தேவைப்படுகிறது. அதற்காகத்தான் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. கர்ப்பிணிகளுக்கும் கக்குவான் இருமல், ரண ஜன்னி மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் போன்ற தொற்றுகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பெற்றோர்கள் மேற்கொள்வது அவசியம். இந்நிலையில் இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டில் சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

உலக சுகாதார அமைப்பு மற்றும் யூனிசெப் இணைந்து வெளியிட்ட தரவுகள் மூலமாக சில அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. அதில், இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டில் சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.இதன் மூலம், அதிக குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இருக்கும் நைஜீரியாவில் 21 லட்சம் குழந்தைகள் எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாமல் இருக்கின்றனர்.

இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்து எத்தியோப்பியா, காங்கோ, சூடான், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன. முதல் 20 நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 10வது இடத்திலும், சீனா 18வது இடத்திலும் உள்ளன. கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023ல் இந்தியாவின் நிலை சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. 2021ல் நாட்டில் எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத குழந்தைகளின் எண்ணிக்கை உலகிலேயே அதிகபட்சமாக 27.3 லட்சமாக இருந்தது.

2021ல் கணக்கிடப்பட்ட தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா உள்பட 20 நாடுகளில் நோய்த்தடுப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனாலும் அதில் சற்றுதான் முன்னேற்றம் கண்ட நிலையில், இந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

Tags :
Advertisement