பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளின் விடுதலை ரத்து - சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. பில்கிஸ் பானு வழக்கு மராட்டியத்தில் நடைபெற்றதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மராட்டிய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன்11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்ய அதிகாரம் இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணியைக் கூட்டுப் பாலியல் செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேர் அந்த கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்..அப்படி வன்கொடுமை செய்த 11 குற்றவாளிகளில் மீது நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கில், கடந்த 2008-ல் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதே சமயம் 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த இவர்களுக்கு, 1992-ம் ஆண்டு தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ், குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியது. இதையடுத்து . கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்ட அவர்களை, விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் வைத்து மாலைகள் அணிவித்து கௌரவித்தனர் . இது நாடெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. .இவர்களின் விடுதலைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பில்கிஸ் பானு உள்பட பலர் மனுத்தாக்கல் செய்தனர். அவற்றை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா அமர்வு விசாரித்துவந்தது
நீதிமன்றத்தில் பில்கிஸ் பானுவின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷோபா குப்தா, "குற்றங்களின் கொடூரமான தன்மையின் காரணமாக குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது. வழக்கின் விசாரணை மகாராஷ்டிராவில் நடந்தது. எனவே, குற்றத்தை குறைக்கும் அதிகாரம் அங்குள்ள மாநில அரசுக்கே (மகாராஷ்டிரா) உள்ளது" என்றார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ஏ.எம். சிங்வி மற்றும் வழக்கறிஞர் விருந்தா குரோவர், "மும்பையில் உள்ள விசாரணை நீதிபதியும் வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வு அமைப்பும் (சிபிஐ) குற்றவாளிகளை விடுவிப்பதற்கு உடன்படவில்லை. இருப்பினும் முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது" என வாதிட்டனர்.
குற்றவாளிகளின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா, "கடந்த 2022ஆம் ஆண்டு, மே மாதம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசு முடிவு செய்தது. குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான விதி, 1992இன் கீழ் குற்றவாளிகளின் கோரிக்கையை பரிசீலிக்க குஜராத் மாநிலத்துக்கு அனுமதி வழங்குகிறது" என்றார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் நகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய ட அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியது. தீர்ப்பில், "குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால், மராட்டிய அரசு தான் 11 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க முடியும். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். பெண்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் ஆஜராக வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.அத்துடன் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி குற்றவாளிகளை விடுவிக்க குஜராத் அரசு பரிசீலனை செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ஏன் குஜராத் அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை என எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் மஹாராஸ்டிரா அரசு சார்ந்தது. இது தெரிந்தும் குஜராத் அரசு அதை எதிர்க்கவில்லை. குஜராத் அரசின் நடவடிக்கை மூலம் மகாராஷ்டிரா அரசின் அதிகாரங்களை குஜராத் அரசு அபகரித்துள்ளது. அது செல்லாதது என்றும் தெரிவித்துள்ளது