For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

100 நாள் வேலைதிட்ட ஊதியம்: தமிழகத்தில் இனி ரூ.319 ஆக உயர்வாம்!

04:47 PM Mar 28, 2024 IST | admin
100 நாள் வேலைதிட்ட ஊதியம்  தமிழகத்தில் இனி ரூ 319 ஆக உயர்வாம்
Advertisement

காத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வரும் 100 நாள் வேலைதிட்ட ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.  நாடு முழுவதும் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்குவதால், தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், திருத்தப்பட்ட ஊதிய உயர்வை அறிவிக்க தேர்தல் ஆணையத்தின் அனுமதியை அண்மையில் பெற்றுள்ளதாக ஊரக வளர்ச்சி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலை என பொதுமக்களால் பரவலாக அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை மத்திய அரசு தற்போது அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தின் பணியாளருக்கான ஊதிய விகிதத்தை மத்திய அமைச்சகம் தொழிலாளர்கள் ஊதிய சட்டம் பிரிவு 6(சி)-ன் கீழ் அவ்வப்போது நிர்ணயம் செய்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் 100 நாள் வேலைக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்திற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் 100 நாள் வேலைக்கான ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் நாளொன்றுக்கு தற்போது ரூ.294 வழங்கப்படும் நிலையில் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதில், மாநிலங்களுக்கு மாநிலம் ஊதிய உயர்வு வேறுபடுகிறது. 3 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், ஹரியாணா மாநிலத்தில் தினசரி ஊதியம் ரூ.357-ல் இருந்து ரூ.374 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ரூ.255-ல் இருந்து ரூ.266 ஆகவும், பிஹார், ஜார்க்கண்டில் ரூ.228-ல் இருந்து ரூ.245 ஆகவும், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் ரூ.221-ல் இருந்து ரூ.243 ஆகவும் தினசரி ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் ஊதியம் ரூ.319...: தமிழகத்தில் 2023-24 நிதி ஆண்டுக்கு இந்த திட்டத்தின்கீழ் தினசரி ஊதியம் ரூ.294 வழங்கப்படுகிறது. வரும் 2024-25 நிதி ஆண்டுக்கு ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 8.5 சதவீத உயர்வு ஆகும். ரூ.25 கூடுதலாக அளிக்கப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாம்.. ஆனால் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற அறிவிப்புகள் மக்களை ஏமாற்றும் செயல் என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags :
Advertisement