ஹெட்போன் உபயோகிக்கும் 100 கோடி யூத்ஸ் செவித்திறன் நிரந்தர இழப்பு?
சர்வதேச அளவில் 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது இவர்களில் 20 சதவீதத்தினரிடம் மட்டும் காது கேட்கும் கருவிகள் உள்ளதாக கூறுகிறது. மேலும் 2050ல் 250 கோடி பேருக்கு ஏதாவது ஒரு வகையான செவித் திறன் பாதிப்பு இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலையும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஹெட்போன்கள் மூலம் சத்தமான இசை கேட்பதால் 100 கோடி இளைஞர்கள், நிரந்தர செவித்திறன் இழப்பை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக எச்சரித்துள்ளது.
செவிப்பறையின் நேர்த்தி குறித்து சொல்வதானால் ஒரு தேர்ந்த இசைக் கலைஞன் தனது தோல் கருவியை இழுத்துக் கட்டியது போல, மூன்று மென்னெலும்புகளில் செவிப்பறை இழுத்துக் கட்டப்பட்டுள்ளது. 16-ல் இருந்து 30,000 வரையிலான நுட்பமான ஓசையைப் பிரித்துணரும் ஆற்றல் மிக்கது நம் செவிப்பறை. சுமார் ஒன்றரை செமீ அளவுக்குச் செவிப்பறைக்குப் பின்னுள்ள மெல்லிய நரம்பு இரண்டிலிருந்து மூன்று செமீ நீளத்துக்குள் 30,000 சுருள்களாக மூளை நரம்பைச் சென்றடைகிறது. இழுத்துக் கட்டப்பட்டதாகத் திண்ணென்று இருக்கும் செவிப்பறையில் துளை விழுவதற்கும் நேரடியான துளைத்தலுக்கும் வாய்ப்பு இல்லை. தூக்கணங் குருவிக் கூட்டைப் போலப் பல அடுக்குப் பாதுகாப்புடன் அமைந்துள்ள செவிப்பறைக்குள் சத்தம் கூட வடிகட்டியே அனுப்பிவைக்கப்படுகிறது.
ஓசையை மட்டுமல்ல காதுக்குள் எது நுழைந்தாலும் தடுத்து நிறுத்த, சுங்கச் சாவடி போல மெழுகுச் சுரப்பிகளும் 4000-க்கும் மேற்பட்ட நுண்மையான முடிகளும் உள்ளன. குளிரைத் தடுத்து வெப்ப மூட்டி அனுப்பும் தடுப்பானாகவும் செயல்படும் அவைதாம் நாம் நீரினுள் மூழ்கும்போது காற்றுத் தடுப்பையும் உருவாக்குகின்றன. காது வலிக்கு மருந்து காய்ச்சி ஊற்றுவது, காதைச் சுத்தப்படுத்துகிறேன் என்று எண்ணெய் ஊற்றி ஊறவிடுவது, காதைக் குடைந்து குறும்பி எனும் மெழுகு எடுப்பது எல்லாமே நமது காதுகளின் தடுப்பு அரண்களைச் சிதைப்பதே ஆகும்.
உச்சமான சத்தத்தைவிடச் சத்தத்தின் அலை அடர்த்திதான் நமது செவிப்பறையை அதிகமாகப் பாதிக்கிறது. அதிக அடர்த்தியான சத்தங்களைக் கேட்கக் கேட்கச் செவிப்பறையின் ஆயுள் குறைந்து கொண்டே போகும். எடுத்துக்காட்டாகக் காதுகளில் கவனத்தைக் குவித்து பாம்பின் ஊர்தல் தொடங்கி யானையின் பிளிறல் வரை கேட்கும் ஒரு வேடனின் செவிப்பறைத் திறன் 90 வயதுவரைகூடக் குறையாமல் தொடர்ந்து நீடிக்கும்.
ஆனால், கச்சேரியில் வாத்தியங்கள் வாசிக்கும் குறிப்பாக ட்ரம்ஸ் வாசிக்கும் கலைஞரின் செவிப்பறை நடுத்தர வயதைக் கடக்கும் முன்னரே அதன் திறனை இழந்துவிடும் சாத்தியம் உண்டு. மனிதனை ஒத்த உடலமைப்பு உடைய எலி, இதுவரை கேட்டுப் பழக்கப்பட்டிராத ஒலியைத் திடீரென்று மிக அடர்த்தியாகக் கேட்க நேர்ந்தால் வெறும் சத்தத்தால்கூட இறந்துவிடும்.
ஆக அதீத சத்தம்தான் காது கேளாமைக்கு முக்கியக் காரணம் என்பதை புரிந்து கொள்ளலாம். பொதுவாக 80 டெசிபல் சத்தம் வரை கேட்பது ஆபத்தில்லை. 90 டெசிபல் சத்தத்தைத் தினமும் எட்டு மணிநேரத்துக்குக் கேட்கிறோம் என்றால், அது காதைக் கட்டாயம் பாதிக்கும். வெடிச் சத்தம் போன்ற 140 டெசிபல் சத்தத்தை சில விநாடிகள் கேட்டாலே காது பாதிக்கப்படுவது நிச்சயம். ஆகவே, விமான நிலையம், ஜெனரேட்டர் ஓடுகின்ற தொழிற்சாலைகள் போன்ற சத்தம் மிகுந்த இடங்களில் வேலை செய்பவர்களுக்குக் காது கேட்காமல் போகும் வாய்ப்பு அதிகம். இதனைத் தடுக்க காதில் பஞ்சை வைத்துக்கொள்ளலாம் அல்லது 'இயர் பிளக்' (Ear Plug) பொருத்திக்கொள்ளலாம். 'இயர் மஃப்' (Ear Muff) அணிந்து கொள்ளலாம்