10 கோடிப் பார்வைகள்-‘தமிழ் மின் நூலகம்’ சாதனை!
நூலகங்களின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகின்றது. மெசபடோமியர்கள் என்றழைக்கப்படும் இன்றைய ஈராக்கியர்களே முதன்முதலில் நூலகத்தை உருவாக்கியவர்கள். இவர்கள் களிமண் பலகைகளில் எழுதி அவற்றை நெருப்பில் சுட்டு அரண்மனைகளிலும் கோவில்களிலும் பாதுகாத்து வைத்திருந்தனர். துறைவாரியாகப் பகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட மெசபடோமியர்களின் முயற்சியை நூலகங்களுக்கான முன்னோடி முயற்சி எனலாம். பின்னாளில் எகிப்தியர்கள், பாப்பிரஸ் என்ற தாளில் எழுதத் தொடங்கினர். கி.மு. 300-ஆம் ஆண்டு வாக்கில் அலெக்சாண்டிரியாவில் 7 லட்சம் பாப்பிரஸ் உருளைகள் கொண்ட கருவூலம் அமைக்கப்பட்டிருந்ததாகவும் இவ்வகைக் கருவூலங்களே தற்போதைய நூலகத்தின் முன்மாதிரி அமைப்பாகவும் கருதப்படுகின்றது. இதற்குப் பிறகு ரோமானியர்கள்தாம் பொது நூலக முறையை முதன் முதலில் ஏற்படுத்தினர். ஜூலியஸ் சீசரின் பங்கு இதில் மிக அதிகமாக இருந்தது. வசதி படைத்தோர் பலரிடமிருந்து உதவி பெற்றுப் பொதுநூலகத்தை அவர் நிறுவினார் என்றும் கி.மு. 4-ஆம் நூற்றாண்டு வாக்கில் 28 பொது நூலகங்கள் ரோமானியர்களால் உருவாக்கப்பட்டு நிருவகிக்கப் பட்டது என்றும் வரலாறு தெரிவிக்கின்றது.
மேலும் அச்சியந்திரங்கள், காகிதங்கள், அச்சிடும் மை முதலான பொருட்களின் பயன்பாடு பெருகிய கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தான் நூல்களும் பெருகின நூலகங்களும் பெருகின. தற்போதைய நூலகங்களின் தோற்றமும் வளர்ச்சியும் நூற்றைம்பது ஆண்டுக்கால வரலாற்றினை மட்டுமே கொண்டுள்ளது. கல்வி மற்றும் மத நிறுவனங்களின் பெருக்கமே நூலகங்களின் பெருக்கத்திற்கு வழிவகுத்தன. உலகம் முழுமைக்கும் இதுவே பொதுவிதி. அரசு நூலகங்களைப் பொதுவாக தேசிய நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், கிராம நூலகங்கள், பகுதிநேர நூலகங்கள், நடமாடும் நூலகங்கள் என்று வகைப்படுத்தலாம். இவ்வகை அரசு நூலகங்கள் மட்டுமல்லாமல் பல்கலைக் கழக நூலகங்கள், கல்லூரி, பள்ளி நூலகங்கள், தனியார் நூலகங்கள், வாசகசாலைகள் முதலான பல்வேறு நூலகங்கள் நாட்டில் இயங்குகின்றன.
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அறிவுத்துறைகள் மட்டுமல்லாமல் அனைத்துத் துறைகளிலும் பெரும்புரட்சியை ஏற்படுத்திவருகின்ற, அறிவியல் உச்சம் எனக் கருதப்படுகின்ற கணினியும் இணையமும் நூல்கள் மற்றும் நூலகங்களையும் தமதாக்கிக் கொண்டு விட்டன. இதுநாள்வரை அச்சிட்ட புத்தகங்களைக் கையில் எடுத்துப் புரட்டி வாசித்துப் பழக்கப்பட்ட நமக்கு கணினியும் இணையமும் மின் நூல்களையும் மின்-நூலகங்களையும் புதிதாக அறிமுகம் செய்து வைத்துள்ளன.தமிழ்ப் பண்பாடு, பாரம்பரியம், மரபு, நாகரிகம், கலை, இலக்கணம், இலக்கியம் முதலியவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்கவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்பக் கணினித் தமிழை வளர்த்தெடுக்கவுமான பல்வேறு அரும்பணிகளைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் ஆற்றிவருகிறது.
இந்நிறுவனத்தின் ஒரு பகுதியாக, அறிவைப் பொதுமைசெய்யும் நோக்கத்தில் 2002இல் நூல்களை மின்னுருவாக்கும் முயற்சியில் இறங்கியது தமிழ் இணையக் கல்விக்கழகம். முதலில் நூற்றுக்கணக்கான அரிய தமிழ் நூல்கள் தட்டச்சு வடிவிலும், பிடிஎஃப் (PDF) வடிவிலும் பதிவேற்றப்பட்டன.
பின்னர், நூல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மின்னுருவாக்கத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி, கன்னிமாரா நூலகம், தஞ்சை சரசுவதி மகால் நூலகம், அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம், உ.வே.சா. நூலகம், தமிழ்நாடு ஆவணக்காப்பகம், அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, அரசு திரைப்படக் கல்லூரி, இந்திய மருத்துவ இயக்ககம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் உள்ள அரிய நூல்களின் லட்சக்கணக்கான பக்கங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டன.இந்தப் பணிகளுக்கிடையே மின் நூலக இணையதளம் (www.tamildigitallibrary.in) அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, 2017 அக்டோபர் 11 அன்று தமிழ் மின்னூலகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்பட்டது. தமிழ் மின்னூலகத் தளத்தில் இலக்கியம், சமயம், வரலாறு, மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் அரிய நூல்கள், பருவ இதழ்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவை பதிவேற்றப்பட்டுள்ளன.இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள், பருவ வெளியீடுகள், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிப் பக்கங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. சீகன் பால்கு 1716இல் லத்தீன் மொழியில் அச்சிட்ட ‘Grammatica Damulica’ என்னும் தமிழ் இலக்கண நூல், தஞ்சை சரபோஜி மன்னர் தொகுப்புகள், உ.வே.சா.வின் அரிய பதிப்புகள், தென்னிந்தியாவின் முதல் செய்தித்தாளான மெட்ராஸ் கூரியர் இதழ்கள், சித்த மருத்துவச் சுவடிகள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வெளியீடுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.மேலும், சங்க இலக்கியங்கள், இலக்கண நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு, காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நீதி நெறி நூல்கள், சித்தர் இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறார் இலக்கியங்கள், மருத்துவ நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், நிகண்டுகள், அகராதிகள், கலைச்சொல்லகராதிகள், ஓலைச்சுவடிகள் என மிகப் பெரும் அறிவுச் சுரங்கமாக விளங்குகிறது இந்நூலகம்.
இந்நிலையில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
தமிழக அரசின் தமிழ் இணைய கல்வி கழகம், தமிழ் மின் நூலகம் www.tamildigitallibrary.in என்ற இணையதளத்தை கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. அதில் இலக்கியம், சமயம், வரலாறு, மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட நூல்களும், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிப் பக்கங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.சீகன் பால்கு 1716-ம் ஆண்டு லத்தீன் மொழியில் அச்சிட்ட கிரமடிக்கா டமுலிகா என்னும் தமிழ் இலக்கண நூல், தஞ்சை சரபோஜி மன்னர் தொகுப்புகள், உ.வே.சா.வின் அரிய பதிப்புகள், சித்த மருத்துவச் சுவடிகள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளன. மேலும், சங்க இலக்கியங்கள், இலக்கண நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு, காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நீதி நெறி நூல்கள், சித்தர் இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறார் இலக்கியங்கள், மருத்துவ நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், நிகண்டுகள், அகராதிகள், கலைச்சொல்லகராதிகள், ஓலைச்சுவடிகள் என மிகப் பெரும் அறிவுச் சுரங்கமாக விளங்குகிறது இந்த நூலகம்.
வ.உ.சிதம்பரனாரின் 150-ம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்வைக் கொண்டாடும் வகையில் அவர் தொடர்பான 127 நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், ஒளிப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய வ.உ.சி. சிறப்பு இணையப் பக்கத்தை கடந்த 2022ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் கலைஞரின் நூற்றாண்டைப் போற்றும் வகையில் ‘கலைஞர்–100′ என்னும் தனி இணையப் பக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மின் நூலகம் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 1.5 கோடி பார்வையைக் கடந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் 6.5 கோடி பார்வைகளைப் பெற்று இருந்தது. தற்போது குறுகிய காலத்தில் தமிழ் மின் நூலகம் 10 கோடிப் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.