தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

🦉பட்டாசு உருவான கதை🧨

08:32 AM Nov 12, 2023 IST | admin
Advertisement

தீபாவளி என்றாலே பட்டாசுதான் நமக்கெல்லாம் முதலில் ஞாபகம் வரும். தீபாவளி தவிர்த்து புதுப்படம் ரிலீஸ், திருமண வீடு, அரசியல் கொண்டாட்டம் என எதுவாக இருந்தாலும் பட்டாசு இல்லாமல் முழுமை பெறாது. இப்படி எந்தக் கொண்டாட்டம் என்றாலும் பட்டையைக் கிளப்பும் பட்டாசு எப்படி உருவானது எனத் தெரிந்து கொள்ளலாமா ?

Advertisement

ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்ப அதன் கனிமமும்,வேதிப்பொருளும் மாறுபடும்.அதன்படி சீனாவில் பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட உப்பில் (பொட்டாசியம் நைட்ரேட்) அதிகளவில் இருந்துள்ளது. தவறுதலாக இது நெருப்பில் படும்போதெல்லாம் தீ ஜுவாலை ஏற்பட்டது.இதனை ஆராய்ந்த சீனர்கள் அதனை மேம்படுத்தி பட்டாசை உருவாக்கினர். அக்காலத்தில் மூங்கிலை வெட்டி அதனுள் வெடி மருந்தை நிரப்பி பட்டாசு உருவாக்கப்பட்டது. நீண்ட காலம் சீனா இந்த ரகசியத்தை யாருக்கும் தெரியாமல் பாதுகாத்தது.போருக்கு மட்டுமே சீனர்கள் இதனைப் பயன்படுத்தி வந்தார்கள்.

Advertisement

பதிமூன்றாம் நூற்றாண்டில் சீனாவில் ஊடுருவிய மங்கோலியர்கள் பட்டாசை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர்.போர்களின் போது எதிரிகளைப் பயமுறுத்தவும், அவர்களுக்குத் தீக்காயம் ஏற்படுத்தவும் இதனைப் பயன்படுத்தினர்.இயல்பாகவே மங்கோலியர்கள் வில்வித்தையில் சிறந்தவர்கள். எனவே அதோடு பட்டாசையும் சேர்த்து தங்களின் அம்புகளில் பொருத்தி எதிரிகளைப் பெருமளவில் கொன்று குவித்தனர். இதைப் பார்த்த மற்ற நாடுகளும் பட்டாசு தயாரிப்பை அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டினார்கள். அதற்குள் சீனாவிலும் பட்டாசு பல வகைகளில் முன்னேற்றம் அடைந்து உருமாறி இருந்தது.

அதை எப்படித் தயாரிப்பது என்பதை அறிந்து கொள்வதற்கு அரேபியர்கள் அலாதி ஆர்வம் கொண்டிருந்தார்கள். அந்த முயற்சியில் சிறிது வெற்றியும் பெற்றனர். அதன் பிறகு அவர்கள் மூலமாக அரேபியா,ஐரோப்பா என உலகில் பிற பகுதிகளுக்கும் பட்டாசு பரவத் தொடங்கியது. நாம் இன்று பயன்படுத்தும் நவீன கால பட்டாசின் தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் தொடங்கியது.

உலகில் சீனா பட்டாசு வர்த்தகத்தில் தனி இடம் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் உள்ள 'சிவகாசி' பட்டாசு தயாரிப்புக்கென பிரதான இடமாக விளங்குகிறது.1930களில் தான் இங்குப் பட்டாசு தயாரிக்கும் தொழில் ஆரம்பித்தது. மிகக் குறுகிய காலத்திலேயே தனித்தன்மையுடன் சிவகாசி பட்டாசு தயாரிப்பில் முதன்மையாக விளங்குகிறது. ஒரு வருடத்திற்குச் சராசரியாக இரண்டாயிரம் கோடி அளவிற்கு நம் இந்தியாவில் பட்டாசு வர்த்தகம் நடைபெறுகிறது.இதன் மூலம் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் அடைகின்றனர்.

உலகளவில் சில பில்லியன் டாலருக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. நம் இந்தியா மட்டுமின்றி உலகளவில் அனைத்து நாடுகளிலும் பட்டாசு வெடிப்பது என்பது மிகப் பிரபலமான பொழுதுபோக்காகும். தீபாவளியைத் தவிர்த்து மற்ற எந்தெந்த பண்டிகைகளில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர் எனப் பார்க்கலாம்.

சீனப் புத்தாண்டு(chinese new year)

பட்டாசு வெடிக்காமல் சீனர்களால் அவர்களின் புத்தாண்டை கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாது.தனியாக மட்டுமின்றி குழுவாகவும் அவர்கள் வெடி வெடித்துக் கொண்டாடுவர் .ஒவ்வொரு வருடமும் பட்டாசு வெடிப்பதற்காகவே சீனர்கள் தங்களின் புத்தாண்டை எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள்.

அமெரிக்க சுதந்திர தினம் (American independence day)

அமெரிக்கர்கள் ஒவ்வொரு வருடமும் தங்களின் சுதந்திர தினத்தினை மிக விமர்சையாக கொண்டாடுபவர்கள். அப்பொழுது அமெரிக்கா உலக அரங்கில் வல்லரசாக எப்படி ஒளிர்கிறது என்பதை உணர்த்தும் பொருட்டு பெரிய அளவில் வான வேடிக்கை நிகழ்வை நடத்துவார்கள்.

கைய் பாக்ஸ் திருவிழா(Guy Fawkes night)

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 5 தேதி இத் திருவிழா கொண்டாடப்படுகிறது.1605 ஆண்டு 'முதலாம் ஜேம்ஸ் அரசரை' கொல்ல சதி நடந்தது. அதனை முறியடித்து அரசாட்சியைக் காப்பாற்றினர். இந்நிகழ்ச்சியில் பட்டாசு வெடிப்பது மட்டுமின்றி கொடும்பாவிகளையும் சேர்த்து எரிப்பார்கள்.

யான்சு திருவிழா (yanshui fireworks festival)

தைவானில் யான்சு மாகாணத்தில் இத் திருவிழா கொண்டாடப்படுகிறது.சீன யுத்த கடவுளான 'குவாங் யு'வை வழிபடும் பொருட்டு இது கொண்டாடப்படுகிறது. மற்ற விழாக்களில் ஒரு பகுதியாக வெடி வெடிப்பர் ஆனால் வெடி வெடிப்பதற்காகவே திருவிழா நடை பெறுகிறது என்றால் அது இங்குதான்."உலகின் மிக ஆபத்தான வெடி திருவிழா" எனப் பெயர் பெற்றுள்ளது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
firecrackersThe story
Advertisement
Next Article