தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

🦉லிட்டில் இந்தியா கலவரம் நிகழ்ந்த தினமின்று!🔥- என்ன? எப்படி?- முழு விபரம்!

07:55 AM Dec 08, 2023 IST | admin
Advertisement

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில், இதே டிசம்பர் 8ல் குமாரவேலு (33) என்ற இந்தியத் தொழிலாளி ஒருவர் மீது தனியார் பேருந்து ஒன்று மோதியதில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து 400 க்கும் மேற்பட்ட வங்கதேச மற்றும் இந்தியத் தொழிலாளர்கள் இணைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். தீவைப்பு சம்பவங்களில் காவல்துறையினரின் வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.இக்கலவரத்தில் காவல்துறையினர் 10 பேர் உட்பட 18 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக தெற்காசியப் பிரஜைகள் 27 பேர் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரில் கடந்த 1969 ஆம் ஆண்டில் சீனர்களுக்கும், மலேசிய பிரஜைகளுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலுக்கு பின்னர், அதாவது 40 ஆண்டுகால வரலாற்றில் இது போன்ற கலவரம் நடந்ததில்லை என்று இன்று வரை சொல்வார்கள்

Advertisement

அதே சமயம் “இது இனக் கலவரம் இல்லை” என்றும், “குடிபோதையில் இருந்த சிலர் ஒரு போக்குவரத்து விபத்து உயிரிழப்பை தொடர்ந்து செய்த கலவரம் மட்டுமே” என்றும் சிங்கப்பூர் பிரதமர் கூறியிருந்தார். “சிங்கப்பூரில் உழைக்கும் பெரும்பாலான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். சிங்கப்பூர் பொருளாதாரத்துக்கு பங்களித்து தமது வாழ்வை நடத்துகின்றனர், சொந்த நாட்டில் இருக்கும் தத்தமது குடும்பங்களுக்கு பணம் அனுப்புகின்றனர்.” என்றார் அவர். “இந்த நிகழ்வை ஊதிப் பெருக்காமல், முழுமையிலிருந்து பரீசீலித்து அதற்குரிய முக்கியத்துவம் மட்டும் கொடுக்க வேண்டும்” என்று சிங்கப்பூரின் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

Advertisement

ஆம், அப்படி முழுமையிலிருந்துதான் பரிசீலிக்க வேண்டும். ஆனால் அது முதலாளித்துவ நோக்கில் அல்ல, தொழிலாளர்கள் பார்வையில்! காரணம் கட்டிடத் தொழிலாளர்கள், துறைமுக பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள் என்று உடல் உழைப்பு கோரும் துறைகளில் வேலை செய்ய லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படுகின்றனர். சுமார் 53 லட்சம் மக்கள் வசிக்கும் சிங்கப்பூரில் தற்காலிக வேலை சீட்டு பெற்று வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 15 லட்சம்.

காலை 8 மணிக்கு ஆரம்பிக்கும் ஷிப்டுக்கு 7.30-க்கே கூடி விட வேண்டும். பாதுகாப்பு அறிவுரைகள், வேலை தொடர்பான அறிவுறுத்தல்கள் கொடுத்த பிறகு 8 மணிக்கு வேலை ஆரம்பிக்கும். 5 மணி வரையிலான வேலை இயல்பான வேலை நாள். அதன் பிறகு நிறுவனத்தின் தேவையைப் பொறுத்து இரவு 8, 9 மணி வரை ஓவர்டைம் வேலை செய்ய வேண்டியிருக்கும். வேலை முடிந்ததும், தங்கியிருக்கும் விடுதிகளுக்குப் போய் தூங்கி விட்டு காலை 7.30 மணி வேலைக்கு தயாராக வந்து விட வேண்டும். இது திங்கள் முதல் சனி வரை தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமையும் வேலை நடக்கும்.

குறைந்த பட்ச கூலிச் சட்டமே சிங்கப்பூரில் இல்லை. ‘அப்படி சட்டம் போட்டால் சிங்கப்பூரின் போட்டியிடும் திறன் குறைந்து முதலீட்டாளர்கள் ஓடி விடுவார்கள்’ என்று சொல்கிறது அரசு. 8 மணி நேர வேலை நாளுக்கு நிறுவனத்தைப் பொறுத்து 16 வெள்ளி முதல் 28 வெள்ளி வரை சம்பளம். அதற்கு மேல் ஓவர் டைம் செய்தால் ஒன்றரை மடங்கு வீதத்தில் சம்பளம் கிடைக்கும். ஒரு நாளைக்கு 12 மணி நேரமும், ஞாயிற்றுக் கிழமை 8 மணி நேரமும் உழைத்தால் நாள் கூலி 20 வெள்ளி பெறும் ஒரு தொழிலாளி வாரத்துக்கு 200 வெள்ளி சம்பளம் பெறுவார். இவ்வாறாக, மாதம் 1,000 வெள்ளி சம்பாதித்தால் தங்குமிட செலவு, சாப்பாட்டு செலவு, அவ்வப்போது வரும் மருத்துவ செலவு போக 500 வெள்ளி வரை சேமிக்கலாம். இந்த 500 வெள்ளியை இந்திய ரூபாயாக மாற்றி (சுமார் ரூ 25,000) குடும்பத்துக்கு அனுப்பும் கடமைக்காக தமது ஊர்களை விட்டுப் போய் அடிமையிலும் அடிமைகளாக அங்கு உழைக்கின்றனர் இந்தத் தொழிலாளர்கள்.

ஞாயிற்றுக் கிழமை மட்டும் தொழிலாளர்களின் ஓய்வுக்காகவும், மன மகிழ்வுக்காகவும் ஓவர் டைம் வேலை திட்டமிடாமல் மாலை 5 மணிக்கு பெரிய மனது பண்ணி வேலைகளை நிறுத்திக் கொள்கின்றன நிறுவனங்கள். தொழிலாளர்களை சிங்கப்பூரின் பல்வேறு புறநகர் பகுதிகளிலிருந்து லிட்டில் இந்தியாவுக்கு அழைத்து வர தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணக் கட்டணமாக 2 வெள்ளி வசூலிக்கும் அந்த பேருந்துகள் 2 வெள்ளி பேருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன. ஞாயிற்றுக் கிழமை மாலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் லிட்டில் இந்தியாவில் டேக்கா எனப்படும் பகுதிக்கு வந்து சேருகின்றனர். தொழிலாளர்கள் பின்னிரவு வரை சாப்பிட்டு, நண்பர்களுடன் அளவளாவி, ஊருக்குப் பணம் அனுப்பும் வேலைகளை முடித்து தமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் கால் நாள் வார விடுமுறையை கொண்டாடுவார்கள். அவர்களில் பெரும்பாலானோர், தமது உடல் களைப்பையும், மனச் சோர்வையும் மறக்க, குடிப்பதும் வழக்கமாக உள்ளது. உழைப்புச் சுரண்டலின் வலியை இங்கே டாஸ்மாக்கில் போக்குவது போல சிங்கப்பூரில் லிட்டில் இந்தியாவில் போக்குகிறார்கள்.

“சிங்கப்பூர் என்றால் கடுமையான சட்ட திட்டங்கள், ஒழுங்குகள் இருக்கும், மக்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவார்கள், இத்தகைய கட்டுப்பாடுகள் மூலமான கறாரான நிர்வாகம்தான் சிங்கப்பூர் மக்களை உலகிலேயே மூன்றாவது பணக்காரர்களாக வைத்திருக்கிறது, நவீன சிங்கப்பூரின் சிற்பி என்று கொண்டாடப்படுபவர் அதன் முதல் பிரதமர் லீ குவான் யு” என்றெல்லாம் சிங்கப்பூர் எனும் முதலாளித்துவ சுரண்டல் நாட்டை வியந்தோதுவது அதனால் ஆதாயம் அடையும் வர்க்கத்தின் வழக்கம். இப்படித்தான் ‘நாட்டின் நற்பெயரை கெடுக்கும் லிட்டில் இந்தியாவில் நடக்கும் இந்த ஞாயிற்றுக் கிழமை திருவிழா’ குறித்து சிங்கப்பூரில் செட்டில் ஆகி நிரந்தர குடியுரிமை பெற்ற பல தமிழர்களே லீ குவான் யுவிடம் புகார் செய்திருக்கின்றனர்.“வாரத்தின் 7 நாட்களும் நமக்காக சிங்கப்பூரை கட்டியமைக்கும் இந்தத் தொழிலாளர்களுக்கு ஒரு சில மணி நேரம்தான் ஆறுதல் கிடைக்கிறது. இதை நாம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்” என்று பதில் சொன்னாராம் அந்த புத்திசாலி தலைவர்.

அவர் அனுமதித்து தொடரும் அந்த பாரம்பரியத்தின் படி, சிங்கப்பூரில் யார் வேண்டுமானாலும், மது வாங்கி, சாலையோரத்தில் கூட உட்கார்ந்து குடிக்கலாம். லிட்டில் இந்தியா பகுதியில் ஞாயிற்றுக் கிழமை மாலை குடித்து விட்டு மட்டையாகி கிடப்பவர்களை பரிவாக எடுத்துச் சென்று, போதை தெளிவித்து, நிறுவனத்துக்கு அனுப்பி வைத்து விடுவார்களாம். ஏன் செய்ய மாட்டார்கள்? பிரஷர் குக்கரின் அழுத்தத்தைக் குறைக்க அவ்வப்போது நீராவியை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் லீ குவான் யுவும் அவர் கட்டமைத்த சிங்கப்பூர் அரசும்.

மாதத் தொடக்கத்தில் சம்பளம் வாங்கிய முதல் வார இறுதியில் கூட்டமும் ‘கொண்டாட்டமும்’ அதிகமாகவே இருக்கும். அப்படி, சென்ற ஞாயிற்றுக் கிழமை லிட்டில் இந்தியா பகுதிக்கு வந்த தொழிலாளர்களில் ஒருவர் ஹெங் ஹப் சூன் என்ற நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்யும் 33 வயதான சக்திவேல் குமாரவேலு. அவர், இரவு சுமார் 9 மணி அளவில் லிட்டில் இந்தியாவிலிருந்து தான் தங்கியிருக்கும் ஜலன் பாப்பான் என்ற இடத்திலிருக்கும் ஆவ்ரி லாட்ஜூக்கு போகும் பேருந்தில் ஏறியிருக்கிறார். அவர் குடி போதையில் இருப்பதால் அவரை இறக்கி விடும் படி பேருந்தின் ஓட்டுனர் (55 வயது), பேருந்து நிலைய பெண் ஊழியரிடம் (38 வயது) கூறியிருக்கிறார். சக்திவேலை கீழே இறக்கி விட்டு பேருந்தின் கதவை மூடிவிட்டு நகர்த்திய போது இடது பக்கம் ஏதோ மோதியதை உணர்ந்திருக்கிறார் ஓட்டுனர். கீழே இறங்கி பார்த்தால் சக்திவேல் இடது பக்க பின் சக்கரத்தில் சிக்கி அடிபட்டு கிடந்திருக்கிறார்.

அங்கு கூடியவர்களில் ஒருவர் அவசர சேவைக்கு தகவல் அனுப்பியிருக்கிறார். அடுத்த அரை மணி நேரத்துக்கு ஆம்புலன்சோ, மருத்துவ சேவையோ வரவில்லை. அந்தப் பகுதியில் ரோந்து போகும் 2 போலீஸ் காரர்கள் மட்டும் வந்து விபத்து நடந்த இடத்தில் கூட்டம் கூடுவதை தடுக்க முயன்றிருக்கின்றனர். இந்த போலீஸ்காரர்கள் லிட்டில் இந்தியா பகுதியில் வழக்கமாக ரோந்துக்கு போகிறவர்கள், அந்தப் பகுதி மக்களிடம் திமிராகவும், அலட்சியமாகவும் நடந்து கொள்வது வழக்கம்.

சக தொழிலாளி ஒருவர் தலை நசுக்கப்பட்டு இறந்து கிடக்கும் நிலையில், மருத்துவ உதவி உடனடியாக வராததால் அதற்குள் கூடி விட்டிருந்த நூற்றுக் கணக்கான தொழிலாளர்களின் கோபம் அதிகரித்தது. அரை மணி நேரத்துக்குப் பிறகு வந்து சேர்ந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சக்திவேலின் உடலை வெளியில் இழுத்து பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர். இதனால் ஆத்திரமுற்ற தொழிலாளிகள் பேருந்தின் ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். ஒரு ஆம்புலன்சை தீ வைத்து கொளுத்தினர். போலீஸ் வாகனங்களை கவிழ்த்து போட்டனர்.

1 மணி நேரத்துக்குப் பிறகு 3 பேருந்துகளில் வந்து சேர்ந்த கலவர போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து 27 பேரை கைது செயதிருக்கின்றனர். கைது செய்யப்பட்ட 27 பேரில் 24 பேர் வெளிநாட்டு தமிழர்கள், 2 பேர் வங்க தேசத்தினர், 1 சிங்கப்பூர் குடிமகன். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விசாரணைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். 26 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பயங்கர ஆயுதங்களுடன் கலவரம் நடத்தியதாக தண்டிக்கப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் பிரம்படியும் வழங்கப்படும். சக்திவேல் கொல்லப்பட்ட விபத்துக்கு காரணமான ஓட்டுனர் கைது செய்யப்பட்டு பிணையில் விடப்பட்டிருக்கிறார். கவனக் குறைவால் மரணத்துக்கு காரணமாதல் என்ற பிரிவில் அவர் மீது வழக்கு போடப்பட்டு பின்னர் நடந்தெல்லாம் தெரியும்தானே?

Tags :
20132013 Little India riotLittle India riotRiotingSingapore
Advertisement
Next Article