🦉லியோ டால்ஸ்டாய் நினைவு நாள் - நவம்பர் 20, 1910.😢
“அரசனின் வாளைவிடப் பேனா முனைக்கு வலிமை அதிகம்”. தமது பேனாவின் மூலம் சமுதாயத்தை மாற்றியவர்களுள் ஒருவரே லியோ டால்ஸ்டாய் ஆவார்.
டால்ஸ்டாய் மாமனிதர்,தலை சிறந்த படைப்பாளி. வாழ்க்கையின் ஆரம்பகட்டங்களில் போக்கிரியாக,சூதாடியாக திரிந்த டால்ஸ்டாய் ஒருநாள் வேட்டைக்கு போனார். கரடி ஒன்றினை வேட்டையாட துரத்தி அதன் ரத்தம் சிந்திய ஜீவ மரண போராட்டத்தை பார்த்ததும் அவருக்குள் கருணை சுரந்தது பைபிள் அவரை செம்மைப்படுத்தியது. சக மனிதர்களின் மீதான அன்பு அவரின் எழுத்தில் கசிந்து கொண்டே இருந்தது. என்றைக்கும் எழுத்தை பொருளீட்டும் ஒரு மூலதனமாக அவர் பார்த்தில்லை. எளிமையாக வாழ வேண்டிய வாழ்கையை அரசும்,ஓயாமல் பொருள் தேடி அலையும் பேராசை எண்ணங்களும் எப்படி சிக்கலாக்கி விடுகின்றன என்று வெகு இயல்பாக சொல்லும் அவரின் எழுத்து உங்களை அப்படியே சொக்க வைக்கும்.
இவர் ரஷ்யாவில் மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். எண்ணற்ற சிறுகதைகளையும் மிகச் சிறந்த புதினங்களையும் எழுதினார். அவற்றுள் ஒன்றுதான் "போரும் அமைதியும்' என்ற நூலாகும். இந்நூலை எழுதி முடிக்க அவருக்கு ஏழு ஆண்டுகள் ஆயின. இன்றளவும் ரஷ்ய இலக்கியத்தின் முக்கிய நூலாக அது கருதப்படுகிறது.
இவர் எழுதிய மற்றொரு காவியம் "அன்னா கரீனீனா' ஆகும். இந்நூல்களைப் படிப்பதன் மூலம் ரஷ்ய சமூகத்தின் பல்வேறு அம்சங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.
இவரது கதைகள் ஆழ்ந்த மனோதத்துவக் கொள்கைகளை வலியுறுத்துவதாக அமைந்தன. அந்த அனா கரீனினா நாவலை எழுதி பெரும்புகழ் பெற்றார் அவர் ; அதன் மூலம் நல்ல வருமானம். கூடவே ஏற்கனவே இருந்த சொத்துகள் வேறு எக்கச்சக்கம். நல்ல கிறிஸ்துவன் நிறைய சொத்துகள் வைத்துக் கொள்ள கூடாது என்று உணர்ந்தார் அவர். ஏழை மக்களை,பிச்சைக்காரர்களை அழைத்தார். அள்ளி அள்ளி எல்லாருக்கும் கொடுத்தார். மனைவி சோபியா பல்லைக்கடித்து கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தார். வன்முறையை விட்டுவிடுங்கள் என்று அழுத்தி எழுதிய அவரின்தாக்கத்தில் காந்தி தன்னுடைய தென் ஆப்ரிக்க ஆசிரமத்துக்கு டால்ஸ்டாய் பண்ணை என்று பெயரிட்டார்.
டால்ஸ்டாய் மகாத்மா காந்தியையும் அவரது கொள்கைகளையும் பெரிதும் மதித்தார்! உலகப் பொதுமறையாம் திருக்குறளின் மொழிபெயர்ப்பு நூலைப் படித்து அதன் பெருமையை ரஷ்யர்களுக்கு விளக்கினார்!
இவர் ரஷ்யர்களுக்கு எழுத்தாளர் மட்டுமல்ல! தத்துவமேதை ஞானி மற்றும் தீர்க்கதரிசியும் ஆவார்!
முன்னரே குறிப்பிட்டது போல் டால்ஸ்டாய் தன்னுடைய எழுத்தை பணமீட்டும் மூலமாக பார்த்தது இல்லை. வீட்டுக்கு என்று பணம் எதையும் விட்டுவைக்க அவர் ஒப்பவில்லை. ராயல்டியை கேட்க வேண்டும் என்கிற மனைவியின் கட்டாயத்துக்கு மசியாமல் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்த நாள் ஆனா கரீனினா இறப்பதாக எழுதப்பட்ட அதே அச்டபோவ் ரயில்வே நிலையத்தில் நிமோனியா தாக்கி காலமானார்.
நிலவளம் ரெங்கராஜன்