🦉ஹேப்பி பர்த் டே ஸ்டீபன் ஹாக்கிங்💐
பிரிட்டனில் 1942ம் வருடம் பிறந்த ஸ்டீபன் படிப்பில் படு சுட்டியாக இருந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டு இருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். 21ம் வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும் மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள்.
துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர்வார்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான். சில நாள்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின் மரணம், பயம் தருவதற்குப் பதிலாக தைரியம் கொடுத்தது. அந்தச் சிறுவனைவிட நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார். உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் மூளையும் சிந்தனையும் முழுஉற்சாகத்துடன் இருப்பதை உணர்ந்தார். சக்கர நாற்காலியில் இருந்தபடியே பல்கலைக்கழக ஆய்வினை முடித்து, பேராசிரியர் ஆனார். திருமணம் முடிந்தது. மூன்று குழந்தைகளும் பிறந்தன.
ஏ.எல்.எஸ் எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால், 1985ம் வருடம் அவரது உடல் முழுமையாக செயலிழந்தது. ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் வலக் கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம் நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்புமுனையான புத்தகம் ஒன்றும் எழுதினார். ‘A Brief History of Time’ என்கிற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது. கலிபோர்னியாவைச் சேர்ந்த கணிணி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கணிப்பொறி மென்பொருள் கண்டுபிடித்து சக்கர நாற்காலியில் பொருத்தித் தர சிரமம் குறைந்து. அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன்.
‘காலம் எப்போது துவங்கியது? எப்போது முடியும்? காலத்தை பின்னோக்கிச் சென்று காண முடியுமா? விண்வெளிக்கு எல்லை உண்டா?’ என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதில் சொல்லி மலைக்க வைத்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்வு, மருத்துவர்களுக்கு கடைசி வரை ஒரு புதிர்தான். உடல்நிலை மோசமான காலகட்டத்தில் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டுப் பரிந்தனர். ஸ்டீபன் அப்போதும் மனமம் தளராமல் தன்னை அன்புடன் கவனித்துக் கொண்ட செவிலியை இரண்டாவதாகத் திருமணம் முடித்தார்.
ஐன்ஸ்டீனுக்கு பிறகு இவ்வுலகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய ஒரே இயற்பியல் விஞ்ஞானி இவர் மட்டும்தான். 'இந்த உலகம் எப்படி தோன்றியிருக்கும்?' என்ற கேள்வி சிறு வயதில் நம் எல்லோருக்கும் இயல்பாக எழுந்திருக்கும். அதற்கான விடையை நாம் தேட முயற்சித்திருக்கமாட்டோம். பலர் அதை தேடி, கடவுள் என்ற பதிலுடன் அந்தக் கேள்விக்கும் அது குறித்தான கற்பனைக்கும் முழுக்கு போட்டிருப்போம். ஆனால் ஸ்டீபன் ஹாக்கிங் இந்தக் கேள்வியை அணுகிய விதம் வேறு. அதன் விளைவாக மனதிற்குள் தட்டிய அந்த சிறு பொறி அனைத்தையும் கரைத்துக் குடித்த அறிவு பொங்கி வழியும் மூளைக்கு சொந்தக்காரராக அவரை மாற்றியது. பொங்கி வழிந்த அந்த அறிவைப் பயன்படுத்தி அவர் எழுதிய 'A Brief History Of Time' எனும் நூல் இதுவரை 30க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலக அளவில் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. இவரை விட தலைசிறந்த ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள் இனி தோன்றலாம். ஆனால் இனியொரு ஸ்டீபன் ஹாக்கிங் தோன்றுவதென்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
கொஞ்சமும் பலமில்லாத மெல்லிய உடல், அதில் பாதி செயல் இழந்த உறுப்புகள், வாழ்வின் முக்கால்வாசி நாட்கள் சக்கர நாற்காலியில் முடக்கம், வாய்பேச முடியாத நிலை என ஒரு மனிதனால் தாங்கக்கூடிய சோதனைகளை விட அதிகம் அனுபவித்தவர். இத்தனைக்கும் மத்தியிலும் அவர் செய்த கருந்துளைகள், பிக்பேங் கோட்பாடு, காலப்பயணம் குறித்தான ஆராய்ச்சிகள் அடுத்த சில பத்தாண்டுகளுக்கு யாரும் தொட முடியாத எல்லை. கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில் சாதாரணமாக டைப் செய்வதற்கு நாம் எவ்வளவு சிரமப்படுகிறோம்? கன்னத்தில் செயல் இழந்த தசைகளுக்கு மத்தியில் இருந்த ஒரு சில செயலிழக்காத தசைகளின் அசைவுகள் மூலம் ஒவ்வொரு எழுத்தாக டைப் செய்து கணினி உதவியுடன் தன் கடைசிகாலம் வரை பேசி வந்திருக்கிறார் என்பது மிகவும் வியக்கத்தக்கது..!
தனது அறிவு வாழ்க்கையில் மட்டுமல்ல, தனது பணி வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் தனது எல்லைகளை விரிவாக்கிக்கொண்டவர் ஹாக்கிங். அறிவியல் மாநாடுகளுக்காக இந்தப் பூமியைச் சுற்றிவந்தவர் அவர். அண்டார்க்டிகா உள்ளிட்ட அனைத்துக் கண்டங்களுக்கும் சென்றிருக்கிறார்; இரண்டு முறை திருமணம் செய்துகொண்டார்; மூன்று குழந்தைகளுக்குத் தகப்பன் ஆனார்; ‘த சிம்ப்ஸன்ஸ்’, ‘ஸ்டார் டிரெக்: த நெக்ஸ்ட் ஜெனரேஷன்’, ‘த பிக் பேங் தியரி’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றியிருக்கிறார்.
சூடான காற்று நிரம்பிய பலூனில் பறந்து தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். 2007-ல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘போயிங் 727’ விமானத்தில் ‘பூஜ்ஜிய ஈர்ப்புவிசை’ பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை அனுபவித்தார்.
விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் கனவுடனும் இருந்தார். ஏன் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறீர்கள் என்று கேட்டதற்கு ஹாக்கிங் இப்படிப் பதிலளித்தார்: “உத்வேகத்தில் எந்த ஊனமும் இல்லாதபட்சத்தில் உடல் ஊனங்களால் முடங்கிப்போய்விடக் கூடாது என்று எல்லோருக்கும் காட்டுவதற்கு விரும்பினேன்.”
அவரது ஆத்ம உத்வேகம் பலரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டுச் சென்றிருக்கிறது.
இவரது மந்திரச் சொல்லின் எச்சம், “எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது”.