For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

🦉“ஜீவா" என்று அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் ப.ஜீவானந்தம்🙏 சில நினைவுக் குறிப்புகள்!

07:18 AM Jan 18, 2024 IST | admin
🦉“ஜீவா  என்று அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் ப ஜீவானந்தம்🙏 சில நினைவுக் குறிப்புகள்
Advertisement

ழைப்பாளர்களின் இயக்கமான கம்யூனிஸ்ட் கட்சியின் ஜீவன். பாட்டாளிகளின் தோழன். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வீரன். கலைகள் பேசிய புலவன். நேர்மையான அரசியலுக்கு இலக்கணமாக இருந்தவன். எளிய மனிதன்… புனிதன் ஜீவா!

Advertisement

நாஞ்சில் நாட்டில் பாண்டியகுல மன்னர்களால் கெளரவிக்கப்பட்ட பூதைபாண்டி என்ற ஊரில்தான் தோழர் ஜீவானந்தம் பிறந்தார். அந்த ஊரில் முத்துப்பட்டனுக்கு அழகிய சிலை ஒன்று உள்ளது. யார் இந்த முத்துப்பட்டன் என்றால், முன்னொரு காலத்தில் அந்த ஊரில் வாழ்ந்தவன். பிராமணனாகிய இவன் தன் சமூக உயர்வையும், செல்வ நிலையையும் தன் காதலுக்காக உதறி விட்டு இரண்டு அருந்ததிய சாதிப் பெண்களை மணந்து, அவர்களின் சாதியோடு ஒன்றிப்போய், அவர்களை எதிர்த்தோருக்கு எதிராக அருந்ததியர் சாதியில் படை அமைத்துப் போராடியவர். காவல் தெய்வமான சொரிமுத்து அய்யனாரின் பக்தனாகவும், அருந்ததிய சாதியினரின் தலைவனாகவும் வாழ்ந்தவன் அவர். அவரின் பெயரையே பட்டம்பிள்ளைக்குப் பெற்றோர்கள் வைத்தார்கள். இப் பட்டம்பிள்ளைக்கும் உமையம்மைக்கும் பிறந்தவர் தான் நம் ஜீவானந்தம். அவர் பிறந்ததும் பட்டனுடைய தெய்வத்தின் பெயரான “சொரிமுத்து” என்ற பெயரையே தன் மகனுக்குச் சூட்டினர்.ஆனால் தனித்தமிழ் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக தன் பெயரை உயிர்இன்பன் என மாற்றிக் கொண்டவர் ஜீவா.சொரிமுத்து என்ற குலதெய்வப் பெயரும் மூக்காண்டி என்று பெற்றோர் வைத்த பெயரும் நிலைக்கவில்லை தோழர் ஜீவானந்தம் என்ற பெயரே நிலைத்தது.

Advertisement

பள்ளியில் ஜீவா

பள்ளிக்கூடத்திலேயே தலைசிறந்த மாணவர் அவர்தான், எனவே பள்ளிவகுப்பில் அவருக்குத்தான் முதலிடம். ஐந்தாம் ஃபாரம் படிக்கும்போதே பாடல்கள் இயற்றும் திறமை பெற்றிருந்தார். ‘காலுக்குச் செருப்புமில்லை… கால் வயித்துக் கூழுமில்லை… பாழுக்கு உழைத்தோமடா… பசையற்றுப்போனோமடா!’ என்ற இவரது பாட்டுதான் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் அனைவரையும் செங்கொடியின் கீழ் திரளவைத்த பாட்டாளி கீதம்!சிறுவயதிலேயே மிகுந்த பக்தி கொண்டவரான ஜீவா, தெய்வ பக்தியோடு சமூகத்திற்கு தொண்டாற்றுவதே தன் லட்சியமென எண்ணினார். அந்த சமயத்தில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கப் பிரச்சாரம் நாட்டைத் தட்டி எழுப்பியது. காந்தியின் முழக்கங்கள் ஒவ்வொன்றும் ஜீவாவின் உள்ளத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்தன். இதைப்பற்றிப் பள்ளிக்கூடத்திலும், ஊர் ஜனங்களிடமும் பேச முற்பட்டார், தன் ஊரிலேயே காந்தி பஜனை நடத்தினார். சிறு வயதிலேயே கவிதைகட்டும் திறனை வளர்த்துக்கொண்ட ஜீவா, காந்திஜியையும் கைராடினத்தையும் பற்றிய தன் முதல் கவிதையை எழுதினார். அப்பொழுது ஜீவா பள்ளியில் நான்காம் பாரத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஐந்தாவது பாரத்திலேயே ஜீவா வெண்பாக்களை இயற்ற ஆரம்பித்துவிட்டார். பின் ஜீவா தன் பொது அறிவை வளர்த்துக்கொள்ள முயன்றார், ஏராளமான நூல்களைப் படித்தார், தமிழ் இலக்கியம், அரசியல், தத்துவ நூல்களைப் படித்தார். கலைகளில் ஆர்வம் கொண்ட ஜீவா, தானே ஒரு நாடகத்தை இயற்றினார். பின் “சுகுனாராஜன் அல்லது சுதந்திர வீரன்” என்ற நாவலை எழுதினர் ஜீவா. அவற்றையெல்லாம் செய்த ஜீவா ஐந்தாவது பாரத்தில் படித்துக்கொண்டிருந்தார் என்பதை மறந்துவிட வேண்டாம்.

ஒருமுறை திருவிதாங்கூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பொழுது இறுதி வகுப்பில் படித்துகொண்டிருந்த ஜீவா தம் சக மாணவர்களை அழைத்துக்கொண்டு சுற்றுப்பயணம் செய்யப் புறப்பட்டார். பின்னர் கட்சி அமைப்பைக் கட்டும் வேலையைத் தொடங்கினார். மகாத்மா காந்தி வாசகசாலையைத் தோற்றுவித்தார். அவருக்கு இருப்புக்கொள்ளவில்லை, கொள்கைப் பிடிப்பு அதிகரித்துக்கொண்டே வந்தது. அவரை புரட்சிப்பாதையில் தள்ளியது. தீண்டாமை நிலவி வந்த அவர் ஊரில், ஆதிக்க சாதியினர் வசிக்கும் வீதியில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் காற்றே வீசக்கூடாதென்ற நிபந்தனை இருந்தது. இதனை உடைத்தெறிய வேண்டுமென எண்ணிய ஜீவா, அந்தத் தெருவில் தாழ்த்தப்பட்ட சிறுவன் ஒருவனை அழைத்துச் சென்றார். ஊரே அதிர்ந்தது. ஜீவாவின் தந்தை மகனுடைய தவறுக்காக மன்னிப்புக் கேட்டார். தன் மகனை கண்டிக்க முற்பட்டார், ஆனால் ஜீவா துணிவோடும் பணிவோடும் அவரை எதிர்த்தார். “தீண்டாமையை ஒழித்தே தீருவேன்” என்றார். தான் செய்தது ‘சரி’ என்று சொல்லிவிட்டு தான் கொண்ட கொள்கைக்காக தன் வீட்டைவிட்டே வெளியேறினார்.

ஆரம்பகாலத்தில் ஜீவா

பின்னர் ஜீவா, சுசீந்திரம் சென்றார், அங்கு சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினார். தாழ்த்தப்பட்டோரையும் அதில் பங்குக்கொள்ள செய்தார். வா.வெ.சு. அய்யரின் ‘பரத்வாஜ் ஆசிரமம்’ அங்கு இருந்தது. பிராமண மாணவர்களுக்கு ஒரு இடத்திலும் பிற மாணவர்களுக்கு மற்றொரு இடத்திலும் உணவு வழங்கப்பெற்றது. இது கூடாது என ஈ.வே.ரா. பெரியார், வரதராஜ நாயுடு அவர்களோடு ஜீவாவும் கிளர்ச்சி செய்தார். பின்னர் சிராவயல் என்ற கிராமத்தில் தானே ஒரு ஆசிரமத்தை நிறுவினார். அந்த “காந்தி ஆசிரமம்” பரத்வாஜ் ஆஸ்ரமத்திற்கு முற்றிலும் மாறுபட்டு இருந்தது, சாதி வேறுபாடு இங்கு இல்லை.

ஒருமுறை வ.உ.சிதம்பரம் பிள்ளை ஜீவாவை தலைமையாசிரியராகக் கொண்ட ஒரு கலாசாலைக்குச் சென்றிருந்தார். அங்கு சிறுவர்களும் சிறுமிகளும் ஒன்றாகச் சேர்ந்து இராட்டைகளைச் சுழற்றிக் கொண்டிருந்தனர். அதைக்கண்ட அவர், “இது ஒரு முட்டாள்தனமான ஸ்தாபனம்” என்று கோபப்பட்டார். இதை ஜீவா கடுமையாக எதிர்த்தார். பின் அதே இடத்தில் ஒரு பொதுகூட்டத்தில் ஜீவா “பெண்விடுதலை” என்ற தலைப்பில் பேசினார், அதைக் கேட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை பெண்களைப் பற்றிய தனது பார்வையை மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜீவாவின் தமிழ்ப் பற்று எல்லையற்றது. தமிழ் அவருக்கு ஒருவிதமான போதையாகவே மாறிவிட்டது. பல தமிழ் நூல்களை வாசித்தார், பல பொதுக்கூட்டங்களில் தன் உரைகளை சுத்தமான தமிழிலேயே நிகழ்த்தினார். இதற்காக பிரபல எழுத்தாளரான வ.ராமசாமியின் பாராட்டுகளை பெற்றவர் நம் ஜீவா.

ஜீவாவும் சுயமரியாதை இயக்கமும்

பல சீர்திருத்தங்களும் போரட்டங்களும் செய்த ஜீவா, சுயமரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். அப்பொழுது ஜாதிக்கொடுமை, பெண் அடிமை, விதவைக் கொடுமை, மூடப்பழக்கங்கள் முதலியவற்றை சமூகத்திலிருந்து வேரோடு சாய்த்து வீழ்த்த வேண்டும்மென்பதே இதன் நோக்கமாக இருந்தது. ஒருமுறை, ஜீவா தன் ஆசிரம வாசிகளுடன் காந்தியைச் சந்தித்தார். அப்பொழுது காந்தி ஜீவாவிடம் “உங்களுக்கு ஏதாவது சொத்து இருக்கிறதா” என்று கேட்டார். அதற்கு ஜீவா, “தாய்நாடு தான் எங்கள் சொத்து” என்று பதிலுரைக்க, “இல்லை! நீங்கள் தான் தாய்நாட்டின் சொத்து” என்று காந்திஜி கூறினார். பின் நாட்களில் காந்திஜீயின் வர்ணாசிரம சிந்தனையை பகிரங்கமாக அவரிடமே விமர்சித்தவர் ஜீவா.

நாச்சியாபுரத்தில் “உண்மை விளக்கம் நிலையம்” என்ற ஓர் ஆசிரமத்தை நிறுவி, அதில் சுதந்திர இயக்கம் மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் தன்மைகளை ஒன்றாக இணைத்தார். 1927-ல் சுயமரியாதை மகாநாடு செங்கல்பட்டில் நடந்தது. ஜீவா அதில் கலந்துக்கொண்டார். பின்னர் அகில இந்திய காங்கிரஸின் வருடாந்திர மகா நாட்டிலும் பங்கேற்றார். ஆணால் காங்கிரஸ் சமூகச் சீர்திருத்தத்தை கவனிக்கவில்லை, சுயமரியாதை இயக்கம் நாட்டுச் சுதந்திரத்தை கவனிக்கவில்லை, தனித்தமிழ் இவ்விரண்டையும் புறக்கணித்ததோடு, மக்களையும் கவனிக்கவில்லை. இவை எல்லாவற்றையும் இணைக்க வேண்டும் என ஜீவா சிந்தித்தார். அந்தச்சமயத்தில் தான் மீரட் சதிவழக்கைப் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

கம்யூனிச தொடர்புகள்

1930-ல் சத்தியாகிரகப் போராட்டம் தொடங்கியது. சென்னையில் காவல்துறை அடக்குமுறை எல்லைமீறிப் போனது. அப்பொழுது சுயமரியாதை மகாநாட்டில் இந்த அடக்குமுறைக்கு எதிராக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஜீவா அதை ஆதரித்து உணர்ச்சி ததும்ப பேசி மக்களின் சுயமரியாதை உணர்ச்சியை தட்டி எழுப்பினார். ஆசிரமத்திற்கு திரும்பிய ஜீவா கத்தியால் குத்தப்பட்டார். மிகவும் அபாயகரமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப் பட்டார். இந்தக் காலத்தில் சோசியலிஸ்ட், கம்யூனிஸ்ட் கருத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் தலைத்தூக்க ஆரம்பித்தது. 1932-ல் காரைக்குடியில் போராட்டக் கமிட்டியின் தலைவராக ஜீவா தேர்ந்தெடுக்கப்பட்டார். போராட்டம் வலுக்கவே அவர் கைது செய்யப்பட்டு, ஒருவருடம் கடுங்காவல் தண்டனைக்குட்பட்டார். அங்கு தான் ஜீவாவிற்கு கம்யுனிஸ்டுகளுடம் தொடர்புகள் ஏற்பட்டன.

அதாவது லாகூர் சதிவழக்கில் கைதான சிலபேருடன் ஜீவானந்தத்திற்கு சிறையில் தொடர்பு ஏற்பட்டது. சோசியலிசம், கம்யூனிசம், சோவியத் யூனியன் முதலியவற்றைப் பற்றி அவர்களிடம் விவாதித்தார். ஏற்கனவே அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்த கம்யூனிச கருத்துக்கள் சரியான உருவத்தை எடுத்தன. உலகிலுள்ள துன்பங்கள் எல்லாம் ஒழிய வேண்டுமேயானால், சமூகக் கொடுமைகள் மடியவேண்டுமேயானால், மனிதன் மனிதனாக வாழ வேண்டுமேயானால், சமூக சீர்திருத்தம் மட்டும் போதாது, பொருளாதார ரீதியான மாற்றம் வேண்டும் என்பதை ஜீவா உணர்ந்தார். ‘குடியரசு’, ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’, ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘புது உலகம்’ முதலிய பத்திரிகைகளில் ஜீவா பொதுவுடைமை கருத்துக்களை எழுதினார். கம்யூனிசக் கருத்துக்களை பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த தோழர் சிங்காரவேலு அப்பொழுது சுயமரியாதை இயக்கத்திலும் ஈடுப்பட்டார்.

ஈ.வே.ரா பெரியாரும், எஸ். ராமனாதனும் சோவியத் யூனியனை பார்த்துவிட்டு திரும்பினர், ஜீவாவும் சிறையிலிருந்து வெளிவந்தார். எல்லா சுயமரியாதை கூட்டங்களிலும் சோசலிசமும் கம்யூனிசமும் பேசப்பட்டது. சுயமரியாதை இயக்கத்தை ஜீவா புரட்சி பாதையை நோக்கி இழுத்தார். ஆனால் ஈ.வே.ரா பெரியார் அதைப் பின்னுக்கு பிடித்து இழுக்க முற்பட்டார். அதிகார வர்கத்தின் மிரட்டலுக்கு உட்பட்டார், நீதிக் கட்சியை ஆதரித்தார். இந்த சூழலில் ஜீவா ஈ.வே.ரா பெரியாரைக் கடுமையாக விமர்சனம் செய்து, சுயமரியாதை இயக்கத்தை விட்டு வெளியேறினார், “சுயமரியாதை சோசியலிஸ்ட் கட்சி”யை அமைத்தார். நாடெங்கும் பிரசித்திப்பெற்ற புரட்சிவீரன் பகத்சிங் எழுதிய “நான் நாத்திகன் ஏன்?” என்ற புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு, அதற்காக சிறைக்கும் சென்றார்.

கம்யூனிஸ்டான ஜீவா

அக்காலத்தில் கம்யூனிசம் என்ற பெயரைக் கேட்டாலே அதிகாரவர்க்கம் நடுங்கிற்று. அப்பொழுது இக்கட்சி சட்டவிரோதமாக இருந்தது. தனது சோசலிச நடவடிக்கையால் ஜீவாவிற்கு சென்னையில் சில கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு ஏற்பட்டது. தோழர் அமீர் ஹைதர்கான் தொழிலாளிகளை ஒன்றுசேர்த்து “யங் மார்க்சிஸ்ட் லீக்” என்று ஒரு சங்கத்தை அமைத்தார். இதற்கு சர்க்கார் தடை உத்தரவு பிறப்பிக்க, உடனே தோழர் ஏ.எஸ்.கே அய்யங்காரும், சுந்தரய்யாவும் “தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம்” என்ற பெயரில் அனைவரையும் ஒன்று திரட்டினார்கள். இந்தச் சங்கத்துடன் ஜீவா தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இந்த பழக்கங்களால் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றியும் அதனுடைய அன்றைய நடைமுறைகளைப் பற்றியும் ஜீவா நன்கு புரிந்துக்கொண்டார். அதன் கொள்கைகள் நாளுக்குநாள் அவர் மனதில் ஆழமாகப் பதிந்தன. எந்த இலட்சியத்திற்காக வீட்டை விட்டு வந்தாரோ, எந்த இலட்சியத்திற்காக ஆஸ்ரமத்தை நடத்தினாரோ, எந்த இலட்சியத்திற்காக சுதந்திரப் போரில் கலந்துக்கொண்டாரோ, எந்த இலட்சியத்திற்காக ஏழை மக்களை நேசித்தாரோ, அதே இலட்சியத்திற்காக தான் கம்யூனிஸ்ட் கட்சி போராடுகிறது என்பதை ஜீவா உணர்ந்தார்.

தன் வாழ்நாளில் எதையெல்லாம் உயர்ந்ததென்றும், நல்லதென்றும் அவர் நினைத்தாரோ, அவையெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையிலும், வேலை முறையிலும், திட்டத்திலும் இருப்பதை அவர் கண்டார்.

இந்தக் காலத்தில் தான் அகில இந்திய காங்கிரஸ் சோசியலிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. இதனுடன் ஆரம்பக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சேராமலிருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதமானபடியால் சோசியலிஸ்ட் கொள்கையை பரப்ப முடியாமல் இருந்தது. எனவே கம்யூனிஸ்ட் கட்சியினர், காங்கிரஸ் சோசியலிஸ்ட் கட்சியில் சேர்ந்து வேலை செய்வது என்று முடிவுகட்டினர். தமிழ்நாட்டில் ஓர் கமிட்டி நிறுவப்பட்டது. அதற்கு தோழர் சீனிவாசராவ் காரியதரிசியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடெங்கும் இக்கட்சி அமைக்கும் பொறுப்பு ஜீவாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

வர்க்க உணர்ச்சியை மறந்து, முதலாளிகளைக் கண்டு நடுங்கி, எப்படிப் போராடுவது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டுத் தொழிலாளி வர்க்கத்திற்கு உணர்ச்சியூட்டி ஸ்தாபனம் அமைத்துக் கொடுத்து, போராட வைத்தார் அவர். ஜீவா என்றால் முதலாளிகளுக்குச் சிம்ம சொப்பனம். 1937-ல் மாபெரும் வேலை நிறுத்தம் ஜீவாவின் தலைமையில் நடந்தது. முப்பது ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேல் போராட்டக் களத்தில் நின்று போராடி ஜெயித்தனர். பின்னர் பல போராட்டங்களை ஜீவா தலைமை தாங்கி தொழிலாளி வர்க்கத்திற்காக நடத்தினார், வெற்றி பெற்றார். அந்த வெற்றி தொழிலாளிகளின் வெற்றியாகவே அவர் கருதினார்.

1939-ல் இவ்விதம் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தியதிற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஜீவாவின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. யுத்தம் ஆரம்பித்தது, தொழிலாளர் தலைவர்களை அதிகார வர்க்கம் வேட்டையாடியது. யுத்தத்தை எதிர்த்து பேசியதற்காக அக்டோபர் 28-ம் தேதி ஜீவா கைது செய்யப்பட்டார், இரண்டரை மாதம் சிறைக்குப் பின் மீண்டும் தன் பணியை தொடங்கினார். திடிரென்று ஜனவரி 11-ம் தேதியன்று சென்னை மாகாணத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அதிகாரவர்க்கம் உத்தரவுப் போட்டது. எனவே காரைக்கால் சென்றார், அங்கிருந்தும் விரட்டப்பட்ட பின் பம்பாய்க்கு சென்றார். அங்கு கைது செய்யப்பட்டு, வேலூர் சிறைக்கு கொண்டுவரப்பட்டார். 1940 மார்ச் மாதத்தில் தேசமெங்கும் கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் விடுதலையாகி தன் சொந்த ஊருக்குச் சென்றார். அங்கு பூதப்பாண்டியை விட்டு அவர் வெளியேறக்கூடாது என அரசு உத்தரவு போடப்பட்டது. இதனால் ஜீவாவுக்கு திருவாங்கூர் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு அவருக்கு எற்பட்டது. பல வாலிபர் சங்கங்களையும், தொழிற் சங்கங்களையும் ஏற்படுத்தினார். பின்னர் தமிழ்நாட்டு தொழிலாளர்களிடம் ஜீவா திரும்பி வந்தார். தமிழ் நாட்டில் ஜீவா செல்லும் இடங்களிலெல்லாம் வாலிபர்களும், தொழிலாளிகளும், மக்களும் திரண்டு வந்தனர்.

ஐம்பத்தாறு ஆண்டுகள் வாழ்ந்த ஜீவா தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் சமூகத்திற்காகவும், தமிழக நலனுக்காகவும், தொழிலாளி வர்க்கத்திற்காகவும், தேச சுதந்திரத்திற்காகவும் அர்பணித்தவர். தமிழகத்தில் அப்போதைய தேவையான விடுதலை, சுயமரியாதை, சமதர்மம் ஆகியவற்றிற்கு தன் இறுதி மூச்சி வரை போராடியவர் தோழர் ப. ஜீவானந்தம். தன் வாழ்நாளில் நடைபெற்ற அனைத்து புரட்சிகர நடவடிக்கைகளில் எத்துனை எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றைக் கண்டு தளராமல் இரண்டறக் கலந்தவர் அவர்.

பொதுவுடைமைக் கட்சியின் கொள்கைகளை விளக்குவதற்கு ஒரு செய்தித்தாள் அவசியம் என்று ஜீவா எண்ணினார்.எனவே கட்சிக்காகவும், செய்தித்தாள் தொடங்குவதற்காகவும் பொதுமக்களிடம் நிதி வசூல் செய்ததன் பின்னர், சென்னைக்கு வருவதற்காகக் கோவை ரயில் நிலையத்தில் தோழர் ஒருவருடன் காத்திருந்தார்.கையில் பெரிய பணமூட்டை. அது அன்றைய பொழுது திரட்டப்பட்ட நிதி. காலையிலிருந்து ஜீவாவும் அவருடைய தோழரும் கொலைப் பட்டினி. அலைச்சலால் ஏற்பட்ட அசதி வேறு!ஜீவாவிடம் அந்தத் தோழர், "பசி வயிற்றைக் கிள்ளுது. சாப்பிடலாமா?" என்றார். "சாப்பிடலாமே ! ஆனால், காசு எது?" என்றார் ஜீவா. "அதுதான் உங்கள் கையில் பெரிய பணமூட்டை உள்ளதே " என்றார் அந்த தோழர்.ஜீவாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. "என்ன பேசுறீங்க... அது மக்கள் கொடுத்த பொதுப் பணம். அதிலிருந்து ஒரு காசு கூட எடுக்கக் கூடாது" என்று உறுதியாக மறுத்துவிட்டார் ஜீவா.பின்பு, அங்கு வந்த தோழர் ஒருவர் இருவருக்கும் சிற்றுண்டி வாங்கிக் கொடுத்தார்.

பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஜீவா, அடிக்கடி வெளியூருக்குச் சென்று மக்களைத் தன் உணர்ச்சிமிக்க சொற்களால் தட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டார்.ஜீவா ரயிலிலிருந்து இறங்கும் போது அவரைக் கைது செய்யக் காவலர்கள் காத்திருப்பர்.இத்தகைய வாழ்க்கைக்குத் தன்னை பக்குவப்படுத்திக் கொண்ட ஜீவாவின் துணைவியார் பத்மாவதி, "ஜீவா ஏறினா ரெயில்; இறங்கினா ஜெயில்!" என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்.

அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதிலும் காமராஜரும் ஜீவாவும் பரஸ்பர அன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தனர். காமராஜர் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில், தாம்பரம் வழியாகச் செல்லும்போது காரை ஜீவாவின் குடிசை வீட்டுக்கு விடச் சொல்வார்.அவ்வாறு ஒருமுறை காமராஜர் ஜீவாவின் வீட்டுக்குள் நுழைந்த போது, ஜீவா நான்கு முழ வேட்டியின் ஒருமுனையை மரத்தில் கட்டிவிட்டு, மற்றொரு முனையைக் கையில் பிடித்துக் கொண்டு வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தார்.உடனே, வசதியில்லாமல் வாழ்ந்த ஜீவாவுக்கு நான்கு ஜோடி வேட்டி, முழங்கைச் சட்டைகளை நட்புரிமையுடன் வாங்கித் தந்தார் காமராஜர்.

பாரதிதாசன், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, என்,எஸ்.கிருஷ்ணன், ம.பொ.சி என கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரையும் அன்புடனும் நட்புடனும் நேசித்தவர் ஜீவா.

உலகத் தமிழ் மாநாட்டு மலரில் எழுதும் போது "பொதுவுடைமைப் பெருந்தகை தோழர் ஜீவாவை கலைவாணர் என்,எஸ்.கிருஷ்ணன் மூலமாக ஆரம்ப காலத்தில் அறிமுகம் செய்துகொள்ளும் பேறு பெற்றேன்" என்று பெருமையாகக் குறிப்பிட்டார் எம்.ஜி.ஆர்.

மக்களுக்காக வாழ்ந்த ஜீவாவுக்கு 1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் நாள் மாரடைப்பு ஏற்பட்டது. அதிகாலை மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார் . ஆனாலும் சிகிச்சை பலனின்றி இதே ஜனவரி18 ஆம்தேதி ஜீவானந்தம் இவ்வுலகை விட்டுப்பிரிந்தார். அவர் பேசிய கடைசி வார்ததையான 'காமராசருக்க போன் பண்னு" என்று கூறி உயிரை விட்ட ஜீவாவிற்கு காமராஜர் தலைமையில் 1966 ஆம் ஆண்டு சிலை திறக்கப்பட்டது. தமிழக அரசும் ஜீவா பெயரில் போக்குவரத்து கழகம் அமைத்தது. இருந்த போதும் தமிழக மக்களும் தமிழக அரசும் ஜீவா போன்ற அறிஞர்களுக்கு செய்த கைமாறு மிகவும் குறைவேயாகும்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement