For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!

02:18 PM Sep 17, 2024 IST | admin
மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை
Advertisement

மோட்டார் சைக்கிள் போன்ற இரு சக்கர வாகனங்களை பல ஆண்டுகளாக ஓட்டும் ஆண்களில் கிட்டத்தட்ட 85 சதவீதம் பேர் முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். ஒரே நிலையில் இருந்து வெகுநேரம் வாகனத்தை ஓட்டிச் செல்வது, கரடு முரடான சாலைகளில் செல்லும்போது முதுகுத்தண்டுப்பகுதி அதிக அதிர்வுக்கு உள்ளாவது போன்றவை முதுகு வலிக்கான காரணங்கள். வாகனம் ஓட்டும்போது இரண்டு கைகளுக்கும், விரல்களுக்கும் தொடர்ந்து ஒரே மாதிரி வேலை கொடுத்துக் கொண்டிருப்பதால், மணிக்கட்டு மற்றும் கைவிரல்களிலும் வலி ஏற்படும்.

Advertisement

வழக்கமான மோட்டார் சைக்கிள் ஓட்டுதலால் ஏற்படும் கழுத்து வலி என்பது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் அனுபவிக்கும் ஒரு பொதுவான நிலை. இந்த வலி கழுத்து பகுதியில் மட்டும் அல்லாமல் மேல் முதுகு, கீழ் முதுகு மற்றும் தோள்பட்டை போன்ற பகுதிகளிலும் ஏற்படும். மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் இதுவும் ஒன்று.

Advertisement

மேலும் தோள்பட்டை வலியும் ஏற்படலாம். கீயரை மாற்றுவது, போக்குவரத்து நெருக்கடியான நேரங்களில் அடிக்கடி கால்களை ஊன்றுவது போன்ற செயல்களால் கால்களிலும் வலி தோன்றும்.இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களில் சிலருக்கு கை பகுதி நரம்புகள் மரத்துப்போகும் நிலையும் ஏற்படுகிறது. குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமானால் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கழுத்து முதல் பாதம் வரை வலியால் அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

வலிகளுக்கான தீர்வுகள் :

தொடர்ச்சியாக இருசக்கர வாகனத்தை ஓட்ட வேண்டாம். 45 நிமிடங்களை தாண்டிவிட்டால், வண்டியை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு, இறங்கி உடலை இயல்புக்கு கொண்டுவந்துவிட்டு, மீண்டும் பயணத்தை தொடருங்கள்.

இரண்டு மணிநேரத்திற்கு மேற்பட்ட பயணத்திற்கு நான்கு சக்கர வாகனத்தை பயன்படுத்துங்கள். மழைக்காலத்தில் முடிந்த அளவு இரு சக்கர வாகனப் பயணத்தை தவிர்த்திடுங்கள்.

குண்டுங்குழியுமான சாலைகளில் பயணித்தால் உடலில் பலகீனமாக இருக்கும் பகுதிகள் அனைத்துமே வலிக்கும்.

வாகனத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்யுங்கள். ‘ஷாக் அப்சர்பெர்’ போன்றவைகளை சரிசெய்யுங்கள்.

சர்வீஸ் செய்யப்படாத வாகனங்களால் உடல் வலி அதிகரிக்கும்.

வலிகள் ஏற்படும்போது ஓய்வெடுத்துப் பாருங்கள். சாதாரண வலிகள் ஓய்வு மூலம் சரியாகி விடும். அப்படி சரியாகாவிட்டால் டாக்டரை சந்தியுங்கள். மாத்திரை மற்றும் பிசியோதெரபி மூலம் சரி செய்துவிடலாம்.

எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ.ஸ்கேன் போன்றவை ஒருவேளை தேவைப்படலாம். பரிசோதனையில் கண்டறிந்த பாதிப்புகளின் அடிப்படையில் சிகிச்சைகள் தேவைப்படும்.

மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டாதீர்கள். நீங்கள் சுயநினைவில் இருக்கும்போது ஒருவேளை வாகனம் விபத்தில் சிக்கினால், சுயபாதுகாப்பு உணர்வு மேலோங்கி முகத்தில் அடிபடாதவகையில் சுதாரித்துக்கொள்வீர்கள். மதுவின் போதையில் இருந்தால் உங்களால் முகத்தை பாதுகாக்க முடியாது. அது மிகுந்த ஆபத்தையும், கஷ்டத்தையும் உருவாக்கிவிடும்.

Tags :
Advertisement