மோடி மீண்டும் சனிக்கிழமை பிரதமர் பதவியேற்கிறார்!
பிரதமர் மோடி தலைமையிலான 17வது மத்திய அமைச்சரவைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது. காலை 11.30 மணி அளவில் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் ஆட்சியை கலைப்பது குறித்து ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஜூன் 16ஆம் தேதியுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக் காலம் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகைக்கு விரைந்த பிரதமர் மோடி, ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பிரதமர் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி திரெளபதி முர்மு, புதிய அரசு பொறுப்பேற்கும் வரை பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் தொடரும் படி கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 7ஆம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பிக்களின் கூட்டம் நடைபெற உள்ளது. அன்றைய நாளில் மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்து எம்பிகளிடையே ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து ஜூன் 8ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொள்ள மோடி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கூறப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வரும் சனிக்கிழமை பதவியேற்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் மோடி. அதன்பின் அந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கிய பின், சனிக்கிழமை (ஜூன் 8) மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.