நேபாளம்: பேருந்து ஆற்றில் மூழ்கிய விபத்தில் 41 பேர் பலி!
மகாராஷ்டிராவிலுள்ள ஜல்காவ் டிஸ்ட்ரிக்கில் உள்ள புஷாவல் என்ற இடத்தை சேர்ந்த 110 பேர் மோடி அரசு உருவாக்கிய அயோத்திக்கு புனிதப்பயணம் மேற்கொண்டனர். அவர்கள் அயோத்தியில் ராமர் கோயிலில் வழிபட்டுவிட்டு அங்குள்ள சித்ரகூட், கோரக்பூர் போன்ற பல இடங்களுக்கு சென்று அங்குள்ள கோயில்களில் வழிபாடு நடத்தினர். பின்னர் நேபாளத்தில் இருக்கும் கோயில்களில் தரிசனம் செய்வதற்காக இரண்டு பஸ்களில் அவர்கள் நேபாளத்துக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு போகாரா என்ற இடத்தில் இருந்து காட்மாண்டுவிற்கு சென்று கொண்டிருந்தனர். அங்குள்ள தானாஹு மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென 44 பேர் பயணம் செய்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி 150 மீட்டர் ஆழமான பள்ளத்தில் விழுந்தது. அங்கு மார்ஷ்யங்கடி எனும் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. பஸ் ஆற்றில் விழுந்தது. விபத்து குறித்து கேள்விப்பட்டதும் நேபாள அதிகாரிகள் மீட்புப்பணியை மேற்கொண்டனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து மஹாராஷ்டிரா அமைச்சர் கிரிஷ் மகாஜன் நேற்று மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது சுற்றுலா பயணிகளின் இறப்புகளை உறுதிப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மகாராஷ்டிரா மாநில அரசு, நேபாள நாட்டின் அரசு நிர்வாகத்துடனும், டெல்லி தூதரகத்துடனும் தொடர்ந்து தொடர்பு கொண்டு நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்கள் என்றார்.‘மேலும் கூறும்போது, நேபாளத்தில் பேருந்து ஆற்றில் மூழ்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது என்றார். இதில் 12 பேர் நேபாள ராணுவத்தால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பெரும்பாலான பயணிகள் மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அமைச்சர் கிரிஷ் மகாஜன் கூறினார்.
இறந்தவர்கள் உடலை கொண்டு வர உத்தரப்பிரதேச பிரயக்ராஜ் மாவட்ட ஆட்சித்தலைவருடன் ஜல்காவ் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடர்பில் இருக்கிறார் என்று துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினார். இறந்தவர்கள் உடலை கொண்டு வர உடனே நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். இன்று உடல்கள் அனைத்தும் சிறப்பு விமானத்தில் கோரக்பூரில் இருந்து நாசிக் கொண்டு வரப்படுகிறது. நாசிக்கில் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது .