நடிகர் விவேக்கின் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை!
நடிகர் விவேக் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்று தேசிய மருத்துவக்குழு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி கொண்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 17 ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் உயிரிழந்தார் என கூறப்பட்டது.
இதனையடுத்து, விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் நடிகர் விவேக் கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்ட பிறகு மரணமடைந்ததாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, நடிகர் விவேக் மரணம் குறித்து 8 வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க மனித உரிமை ஆணையம் இந்திய சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், நடிகர் விவேக் உயர் ரத்த அழுத்தம் காரணமாக கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக, தடுப்பூசியால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தேசிய குழு, தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், நடிகர் விவேக்கின் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தேசிய மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.