தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகள் கவிதா கைது!
டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் சவுத் குருப் என்ற பெயரில் கவிதா, சரத் ரெட்டி, முகுந்தா சீனிவாசலு ரெட்டி ஆகியோர் செயல்பட்டுள்ளதாகவும், இவர்களிடம் இருந்து விஜய் நாயர் என்பவர் ஆம் ஆத்மி தலைவர்கள் சார்பாக ரூ. 100 கோடியை பெற்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்த சூழலில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவை, அமலாக்கத் துறை ஹைதராபாத்தில் கைது செய்துள்ளது.
டெல்லியில் ஆ ம்ஆத்மி அரசு சார்பில் 2021 நவம்பரில் இந்த புதிய மதுபான கொள்கை அமலுக்கு வந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆளுநர் விகே சக்சேனாவுக்கு புகார்கள் சென்ற நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.இதையடுத்து புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு 2022 ஜூலையில் திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.இதுதொடர்பாக மணிஷ் சிசோடியா, விஜய் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.இதில் தெலங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தொழிலதிபர் குழுவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த குழு மூலம் ரூ.100 கோடி வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த குழுவுக்கும் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவரிடம் சிபிஐ, மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஹைதரபாத்தில் உள்ள பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) எம்எல்சி-யான கே.கவிதாவின் ஹைதராபாத் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று தீவிர சோதனை நடத்தினர். தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தொடர்புடைய பணமோசடி விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கவிதாவை கைது செய்து டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்,
முன்னதாக கடந்த 2 மாதங்களில் அமலாக்கத்துறை அனுப்பிய 2 சம்மன்களையும் தவிர்த்திருந்தார். 2021-22ம் ஆண்டுக்கான டெல்லி கலால் கொள்கையின் கீழ், பெரும் பங்கு வகிக்க முயற்சித்த மது வியாபாரிகளின் தென்னக லாபி என்ற அடையாளத்தில் கே.கவிதாவுக்கு எதிரான விசாரணையை அமலாக்கத்துறை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில்தான் கவிதாவின் ஹைதராபாத் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டபோதே அவர் கைது செய்யப்படுவார் என பிஆர்எஸ் கட்சியில் பதற்றம் எழுந்தது. இதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய பிஆர்எஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஸ்ரவன் தசோஜு, ”அமலாக்கத்துறையின் சோதனைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான கட்சியின் தலைவர்களை துன்புறுத்த காங்கிரஸ் உடன் பாஜக மறைமுகமாக கைகோத்துள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
"பிரதமர் மோடி எங்கு சென்றாலும் அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை அங்கே முந்திக்கொண்டு, ஏதேனும் சோதனை அல்லது கைதுகளை நிகழ்த்துகிறது. தெலுங்கானாவிலும் அதுவே நடக்கிறது. பிஆர்எஸ் கட்சியினர் மத்தியில் பாஜக ஒரு பீதியை உருவாக்க பாஜக விரும்புகிறது. ஆனால் சட்டவிரோத சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் தெலங்கானா காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை அல்லது ஐடி துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை” என அவர் மேலும் குற்றம்சாட்டினார்.