தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தமிழ் தமிழ்தான்.-தமிழ் தனித்துத்தான் இயங்கும்!

01:31 PM Sep 01, 2024 IST | admin
Advertisement

சிங்கப்பூரின் மொழிச்சூழல் முற்றிலும் புதுமையானது. முதன்மைத் தொடர்புமொழியாக ஆங்கிலமே எங்கெங்கும் கோலோச்சுகிறது. ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என நான்மொழிச்சூழலில் இயங்கும் நாடு. நான்மொழிகளுக்கும் உரிய இடமும் தகைமையும் உண்டு. ஒன்றுக்கொன்று கீழ்மேலில்லாத இணையான தளத்தில் அம்மொழிகள் செயல்படுகின்றன. எழுத்தும் குரலுமான அறிவிப்புகள் யாவும் இம்மொழிகளில் முறையே வெளிப்பட்டுள்ளன. ஓரிடத்தில் தமிழறிவிப்பு இல்லாமல் மீதமுள்ள மும்மொழிகளில் மட்டுமே அறிவிப்பு உள்ளதெனில் உடனே குறைதீர்க்க வேண்டலாம். உடனே அவ்விடத்தில் தமிழ்மொழி இடம்பெற்றுவிடும். அவ்வாறு உடனுக்குடன் ஆவன செய்யப்படுகிறது.

Advertisement

நிலத்தடியே செல்லும் இருப்பூர்தியான குடைவூர்தியில் (MRT) பன்முறை செல்ல நேர்ந்தது. ஒவ்வொரு நிறுத்தத்தின் பெயரையும் ஆங்கிலத்தில் அறிவிக்கிறார்கள். அடுத்தடுத்து அறிவிக்கப்படும் பெயர்கள் சீனத்திலும் மலாயிலும் அம்மொழிக்குரிய சொற்களோடு அறிவிக்கப்பட்டன. ஆங்கிலத்தை அப்படியே ஒலிபெயர்ப்பு செய்யவில்லை. ஆனால், தமிழின் அறிவிப்பு முறை நாலாவதாக வந்தபோது மீண்டும் ஆங்கிலச் சொல்லை அப்படியே ஒலித்தார்கள். ‘Gardens by the Bay’ என்ற இடத்தில் மட்டும்தான் ‘கரையோரப் பூந்தோட்டங்கள்’ என்ற தமிழாக்கப் பெயரைக் கேட்டேன். ஒவ்வோர் இடப்பெயரையும் அவ்வம்மொழிக்கு உரிய பெயர்ச் சொல்லில் ஆக்கி வழங்கும்போது தமிழ்வாய்ப்பினை மட்டும் ஆங்கிலத்திற்கே கொடுத்துவிட்டார்கள். இவ்விடத்தில் அந்தப் பெயர்களுக்கான பொருளில் தமிழ்ச்சொல்லை ஆக்கி அவற்றைப் பயன்படுத்துமாறு கோரியிருக்கலாம். எல்லாப் பெயர்களையும் செய்யமுடியாதுதான். ஆனால், இவ்வாறு புதிதாக ஆங்கிலத்தில் வைக்கப்பட்ட பெயர்களின் தமிழாக்கங்களை நடைமுறைப்படுத்த முயன்றிருக்கலாம். ‘மொழி மக்கள் தங்களுக்குரிய மொழியாடல்களைக் கோருங்கள்’ என்ற நிலையிலுள்ள அரசிடம் இதனைச் செயலாக்குவது எளிதுதான்.

Advertisement

‘சிங்கப்பூர் கண்டதும் கற்றதும்’ நூலில் நான் ஆக்கிச் சென்ற இடம்சார் தமிழ்ச்சொற்கள் அம்மக்களிடையே தோற்றுவித்த நல்லுணர்ச்சி இதுதான். இவ்வழியில் திருத்தங்கள் கோரப்படலாம். அல்லது இனிமேலான பெயரிடல்களில் கவனத்தோடு இருக்கலாம். வாய்ப்புகளைக் காலத்திடம் விட்டுவிடலாம். முயன்றோம் என்று இருக்கட்டுமே. எழுத்து, பேச்சு சார்ந்த செயல்பாடுகளில் ஒரு தமிழ்ச்சொல்லை ஆள்வதா, ஆங்கிலச் சொல்லை ஆள்வதா என்ற கேள்வியெழுமிடத்தில் கட்டாயமாகத் தமிழ்ச் சொல்லைத்தான் ஆளவேண்டும். ஆங்கிலச் சொல் உங்கள் மொழி மனத்திலிருந்து முற்றாக அகன்றுவிடவேண்டும். இருமொழிகளுக்கிடையே ஊசலாடிக் கொண்டிருந்தால் உங்களால் எம்மொழியிலும் திறம்பெறல் இயலாது. மொழிமனம் கட்டமையாது. வாழ்க்கைக்கேற்ற உரையாடல்களுக்கு எனக்குக் கலப்புவகையே போதும் என்று இருப்பது பெருமுன்னேற்றங்கள் கனிந்து நகரும் இக்காலத்தில் தன்னலமும் முயலாமையும் அன்றி வேறென்ன ?

தனித்தமிழ் என்று தனியாக ஏதுமில்லை. தமிழ் எப்போதும் தனித்து இயங்குவதுதான். ஒரு மொழியை பிறமொழிச் சொற்கலப்பு நீக்கிப் பயன்படுத்துவதுதான் மொழியாள்வது ஆகும். தாய்மொழியில் ஆங்கிலக் கலப்பு நேர்வதை ஏற்றுக்கொள்ளுமிடத்தில் எதனை நிலைநிறுத்துகிறீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளவேண்டும். உங்களுக்கு ஆங்கிலம் நன்கு வருகிறதா, ஆங்கிலத்தையே நன்கு பேசிக்கொண்டு போகலாம். தமிழில் ஆங்கிலத்தைப் புகுத்திக் கலப்பானேன் ? எல்லாம் கலந்து கலந்துதான் வாழ்கிறது என்றால் மொழிமக்களிடையே கடைசிவரை பண்பாட்டுக் கலப்பு நேர்வதில்லையே, ஏன் ? தமிழரும் சீனரும் தனித்தன்மை மாறாமல்தானே வாழ்கிறோம் ?

மொழிப் பயன்பாட்டில் எழுத்திலும் பேச்சிலும் இயங்கும் மொழிச் செயல்பாட்டாளர்கள் அடிக்கடி கூறுவது ‘மக்களுக்குப் புரியாது’ என்பதுதான். இவ்வளவு கலப்பினைச் செய்து பயன்படுத்திக்கொண்டுள்ளீர்களே, மக்கள் அணியணியாக, எல்லாம் புரிந்தவராய் உங்கள் பின்னே வந்துவிட்டார்களா ? ஆங்கிலம் கலந்து, வடசொற்கள் உள்ளிட்ட பிறமொழிச் சொற்கள் கலந்து வண்டி வண்டியாக எழுதினீர்களே, உங்கள் நூல்கள் வெறும் மூன்றிலக்க எண்களிலாவது விற்பனையைத் தொட்டுவிட்டனவா ? ஆகா, நமக்கு எளிதில் விளங்குகின்ற கலப்பு மொழி என்று பிறமொழி கலந்த தமிழ் எழுதுவோர் பின்னே மக்கள் சாரை சாரையாக வந்து குவிந்துவிட்டனரா ? எல்லாம் கற்பனை மயக்கங்கள்தாம். இதற்கு முறையாகவே நல்ல தமிழில் எழுதியிருக்கலாம். இனிய விளைவுகளேனும் ஏற்பட்டிருக்கும். தனித்தமிழ் என்று தனித்து ஒதுக்கிப் பார்ப்பதும் அடையாளப்படுத்துவதும் ‘இம்மொழியே கலப்பால் ஆனதுதான்’ என்று மறைமுகமாகக் கூறுவதாகும்.

தமிழ் தமிழ்தான். தமிழ் தனித்துத்தான் இயங்கும். மாசு களைந்து பயன்படுத்துவதான் மொழிச் செயல்பாட்டாளர்களின் வேலை. நானும் என் பங்குக்குச் சிறிது மாசு கலக்கிறேன் என்பது ஏற்கத்தக்கதன்று. தனித்தமிழில் எழுதத் தெரியவில்லை எனில் என்னால் பிறமொழிச் சொற்களைக் கலந்துதான் எழுத முடியும் என்று ஒப்புக்கொள்வதாகும். அவ்வாறுதான் எழுதுகிறீர்கள் எனில் அது உங்கள் தேர்வு. ஆனால், அது மொழிக்குற்றம். குற்றம் குற்றமே. தேவையுள்ள இடங்களில், அரிதினும் அரிதாகப் பிறமொழிச் சொல் வரலாகுமே தவிர இம்மொழியின் அனைத்துச் சொற்களும் தனித்த மொழிச் சொல்லாகத்தான் இருக்கவேண்டும். எல்லா மொழிகளிலும் இப்பண்பே அடிப்படை. இங்கே பன்மொழிக்கூட்டுச்சொன்மொழியாகிய ஆங்கிலம் எடுத்துக்காட்டு ஆகாது.

“முகநூல் என்று பயன்படுத்தினேன். பிறகு பேஸ்புக் என்றே பயன்படுத்துகிறேன்” என்ற நிலைப்பாட்டில் சிலரையும் பார்க்கிறேன். அவ்வளவுதான் உங்கள் முயல்வு. “இங்கே எந்த வேலைக்காக வந்துள்ளோமோ அந்த வேலையைப் பார்ப்போம்” என்று ஒதுங்கிக்கொண்டீர்கள். பேஸ்புக் என்று ஒரேயொரு சொல்லைமட்டும் ஏன் பயன்படுத்தவேண்டும் ? முழுவதுமாக ஆங்கிலத்திலேயே எழுதிச் செல்லுங்களேன். உங்களால் தமிழில் எழுதிச் செயல்பட்டதில் அடைந்த ஒரு விழுக்காட்டையேனும் அடைய முடிகிறதா என்று பார்ப்போம். முடியாதில்லையா ? அதாவது உங்களுக்கு ஆங்கிலமும் வராது. உங்கள் ஆங்கில எழுத்து ஆங்கிலப் புழங்காளர்கள் நடுவிலும் எடுபடாது. தமிழ்மக்களிடத்திலும் செல்லாது. ஆனால், பிறமொழிச் சொற்களைக் கலந்து மாசுபடுத்துவதற்கு எந்தக் குற்றவுணர்ச்சியும் கொள்ளமாட்டீர்கள். என்னே உங்கள் நிலைப்பாடு ? ஐயா, விற்பேர் என்பதால் இப்படிச் செய்கிறோம் என்று சொன்னால் ஒதுங்கிச் செல்லுங்கள். கடவுள் பெயரையே அவ்வம்மொழியில் ஆக்கித்தானே சொல்லுகிறோம் ? நிறுவனப் பெயர்ப்பதிவு என்னும் வரிகட்டல், தொழிற்செய்யல் சார்ந்த அரசு இசைவுதானா ஒரு மொழியில் ஒரு சொல் புகுந்து நிலைபெறுவதற்கான சொற்தகுதி ? ஒரு நிறுவனம் இன்றைக்கு இருக்கும், நாளைக்குக் குடைசாய்ந்துவிடும். ஆனால், அது விட்டுச்செல்லும் சொல் என்றைக்கும் இருக்குமே. விடை உள்ளதா ?

அடுத்த தலைமுறையினர் தமிழை எழுதப் படிக்கத் தெரியாத நிலையில் வளர்ந்து வருகின்றனர். அவர்களிடையே மொழியுணர்வு பெருகுவதற்குத் தொடர்ந்து மொழியழகுடைய அனைத்தையும் கண்ணில் காதில் படுமாறு செய்யவேண்டுமா ? மேலும் மேலும் மாசு கலந்து கலந்து மொழிச்சொல்லுணர்ச்சியையே மழுங்கடித்து விடவேண்டுமா ? வளரும் தளிர்கள் எல்லாவற்றுக்கும் ஏற்புடைய நெஞ்சினராகிய இருக்கையில் அவர்களுக்குப் புகட்டும் நிலையிலுள்ள மொழிச் செயல்பாட்டாளர்கள் (எழுத்து, இதழ், மேடை, உரையாடல், கலை, பாடல், நாடகம், வலையொளி, திரைப்படம் என்று மொழியைப் பயன்படுத்துபவர்கள்) சிறிதும் தளராமல் மொழிச்சொற்களைத் தொடர்ந்து கையாண்டுகொண்டே வரவேண்டும்தானே ? அதனை விடுத்து, இருக்கின்ற சிறிதளவு வேர்த்தொடர்பையும் பிறமொழிச் சொற்கலப்பை இயல்பானதாக்கி அறுத்தெறியலாமா ?

தமிழ்நாட்டில் இன்றைய இளையோரிடம் சென்று ஒரு மளிகைக்கடைப் பட்டியலை எழுதச் சொல்லுங்கள். ‘வெங்கயம், தக்லி, பறுப்’ என்று எழுதுவார்கள். திரும்பிய இடங்களிலெல்லாம் அவர்களுக்குத் தமிழை முறையாகவும் தொடர்ந்தும் பயிற்றுவிக்கும் செயல்களைச் செய்ய வேண்டும் என்பேன். தமிழினுடைய தற்கால நிலைமை இவ்வாறிருக்கையில் அதனைப் பற்றிய அக்கறை சிறிதுமில்லாமல் தலையணை தலையணையாய்ப் புத்தகங்கள் எழுதுவதால் யார்க்கு என்ன பயன் ? படிப்பதற்கு யார் மிஞ்சுவார் ? இந்தக் காலத்திலுமா என் எழுத்துகளைப் பத்துப் பேர் படித்தால் போதும் என்று கூறிக்கொண்டிருப்பீர்கள் ? ஆங்கிலம் பேருருக்கொண்டு உலக மொழிகளை அழிக்கத் துடிக்கிறது, இங்கே தலையணை தலையணையாக எழுதி மணிப்பிரவாளத்திற்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்கள் இருக்கிறார்களா, இல்லையா ? நவீன இலக்கியவாதிகள் மட்டற்ற மணிப்பிரவாளத்தில் எழுதிக்கொண்டுள்ளார்கள். வெகுமக்கள் எழுத்தாளர்கள் தங்குதடையற்ற தமிங்கிலீசில் எழுதிக் கொண்டுள்ளார்கள். இல்லை என்பீர்களா ?

அவ்வளவு ஏன், புகழ்பெற்ற தமிழ் அகராதித் தொகுப்புகளிலேகூட ஆங்கிலத்தில் பொருள் விளக்கங்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். தமிழ்ச்சொற்களின் அகராதிகளில் எதற்காக ஆங்கில விளக்கம் இடம் பெற வேண்டும் ? அங்கே ஆங்கிலேயர்கள் ஆங்கில அகராதி தொகுத்தால் விளக்கத்தைப் பிரெஞ்சு மொழியிலோ, செருமானிய மொழியிலோ சேர்த்துப் பதிப்பிப்பார்களா ? இத்தகைய செயல்கள் தமிழில் நடந்திருக்கின்றன. இன்னும் நிறையச் சொல்லுவேன். இத்தகைய விடைகூறல் எழுத்துகளைவிடவும் களச்செயல்களே களையெடுக்கும். வாருங்கள், காலத்தின் முன்னே கட்டாயமாக நிற்கும் மொழிப்பணிகளைக் கைகோத்துச் சேர்ந்து செய்வோம்.

கவிஞர். மகுடேசுவரன்

Tags :
தமிழ்தமிழ் மொழிமொழிமொழியாடல்
Advertisement
Next Article