டெங்கு 360°
''டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். கழிவு நீரல்லாத எந்த நல்ல தண்ணீரிலும் முட்டையிட்டு வளர்கிற `ஏடிஸ் ஏஜிப்தி' (Aedes aegypti) என்ற கொசுவின் மூலம்தான் மனிதர்களுக்கு டெங்கு ஏற்படுகிறது. வெயில், மழை என ஒரே நாளில் வெவ்வேறு பருவநிலை நிலவும்போது, நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கும். வெறும் 3 வாரங்கள் மட்டுமே வாழக்கூடிய ஏடிஸ் ஏஜிப்தி கொசு, சிரட்டை, டயர், பிளாஸ்டிக் கப், ஆட்டுரல், ரப்பராலான கால் மிதியடி போன்றவற்றில் தேங்கி நிற்கிற சிறிதளவு நல்ல தண்ணீரிலும் முட்டையிட்டு பல்கிப் பெருகிவிடுகிறது.
டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் கடித்துவிட்டு, மற்றவர்களையும் கடித்தால் அவர்கள் அத்தனை பேருக்கும் டெங்கு காய்ச்சல் வரும். இதன் காரணமாகத்தான், ஒரே நேரத்தில் பலரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவமனைகளில், டெங்கு காய்ச்சல் வந்தவர்களை கொசு வலைக்குள்தான் வைத்திருப்பார்கள். பாதிக்கப்பட்டவரைக் கடித்த கொசு மற்றவர்களைக் கடித்தால், மருத்துவமனையில் இருக்கிற அத்தனை பேருக்கும் டெங்கு வந்துவிடலாம் என்கிற எச்சரிக்கை உணர்வுதான் காரணம். மற்றபடி, இருமல், தும்மல், தொடுதல் போன்ற வழிகளின் மூலம் டெங்கு வைரஸ் பரவாது.
ஒரு தெருவில், ஒரேயொரு வீட்டில் நல்ல தண்ணீர் தேங்கியிருந்து, அதில் ஏடிஸ் ஏஜிப்தி கொசு முட்டையிட்டிருந்தாலும் அங்கிருந்து அரை கிலோ மீட்டர் வரைக்கும் ஏடிஸ் கொசுக்கள் பறந்துபோகும். விளைவு, அந்த அரை கிலோமீட்டரில் இருப்பவர்களில் எத்தனை பேரைக் கடிக்கிறதோ, அவர்கள் அத்தனை பேருக்கும் டெங்கு வரும். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாடு செல்கிறார் என்றால், அங்கிருப்பவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் வரலாம். ஒருவருடைய அலட்சியம் பலருக்கும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் என்பதால், நல்ல தண்ணீரைத் தேங்கவிடாமல் இருப்பதில் அனைவருமே கவனமாக இருக்க வேண்டும்.
இந்தக் கொசு பகலில்தான் கடிக்கும் என்பதால், பகல் நேரங்களிலும் கொசுவிரட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பகல் நேரங்களில் முழுக்கை சட்டை, பேன்ட் அணிவிக்க வேண்டும்.
ஊரெங்கும் பருவ மழை பெய்து வரும் சூழ்நிலையில் டெங்கு காய்ச்சல் குறித்த அறிவைப் பெறுவது நம் அனைவரின் கட்டாயக் கடமையாகும்.
டெங்கு காய்ச்சலின் போக்கு:
முதல் மூன்று நாட்கள் உடல் கொதியோ கொதி என்று கொதிக்கும்.
சர்வ சாதாரணமாக 102° - 104° காய்ச்சல் அடிக்கும்.
கூடவே கண்களுக்குள் கடுமையான வலி. உடலின் மூட்டுகளை உடைத்துப்போடும் அளவு வலி குறிப்பாக முதுகு குறுக்கு வலி ஏற்படும்.
இத்துடன் வேறு அறிகுறிகள் ஏதும் பொதுவாக இருக்காது. ஆயினும் சிலருக்கு மூக்கொழுகுதல் , இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.
இந்த கட்டத்தை காய்ச்சல் அடிக்கும் காலம் (FEBRILE PHASE) என்று கொள்ளலாம்.
அடுத்த மூன்று நாட்கள், முந்தைய காய்ச்சல் காலத்துக்கு நேர்மாறாக உடல் சில்லென்று குளிர்ந்து போகும். குறிப்பாக பாதம் , உள்ளங்கை போன்றவை குளிர்ந்து விடும். காய்ச்சல் விட்டு இந்த குளிர் நிலை ஆரம்பமாகும் போது தான் பிரச்சினைக்குரிய காலகட்டம். இதைத்தான் அபாயகரமான காலகட்டம் (CRITICAL PHASE) என்கிறோம்.
டெங்குவால் ஏற்படும் ரத்தக்கசிவு நடக்க ஆரம்பிப்பதே இந்த 4, 5, 6 நாட்களில் தான் என்பதை அறிய வேண்டும்.
காய்ச்சலின் போக்கு
முதல் மூன்று நாள் 103-104 டிகிரி இருக்கும் காய்ச்சல் , 4வது நாள் சட்டென்று குறைகிறது.
இரண்டு நாள் குறைகின்ற காய்ச்சல் திடீரென்று 6வது நாள் 100 டிகிரி அளவுக்கு ஏற்றம் காணுகிறது
ஆக, நாம் ஜாக்கிரதையா இருக்க வேண்டியது 4,5,6 நாட்கள் தான்.
முதல் மூன்று நாட்களில் , உடல் உஷ்ணத்தால் உடம்பில் இருக்கும் நீர்சத்து வெகுவாக குறைகின்றது.
நாக்கு வரண்டு போகும்.
சிறுநீர் சரியாக செல்லாது.
இவையெல்லாம் முதல் மூன்று நாட்கள் இருக்கும்.
அடுத்த மூன்று நாட்கள் தான் நமக்கு "போர் காலம்". இதில் தான் ரத்த கசிவு நடக்க வாய்ப்பு இருக்கிறது.
ரத்தக் கசிவு வெளியே பல்லில் ஈறுகளில் இருந்து வெளியேறலாம்.
மலம் கருப்பாக வெளியேறுவது நடக்கலாம். ரத்த பரிசோதனைகளில் முதல் மூன்று நாட்கள் எந்த பாதிப்பும் வெளியே தெரியாது, ஆனால் 4 ஆம் நாளின் தொடக்கத்தில் இருந்து தட்டணுக்கள் சரிவதை கண்டுபிடிக்கலாம், 5 ஆம் நாளும் 6 ஆம் நாளும் அதனினும் குறைந்து பிறகு மீளும்.
வந்திருப்பது டெங்கு என்பதை பின்வரும் விசயங்கள் மூலம் அறியலாம்
1. அதீத காய்ச்சல் காய்ச்சலுடன் கடுமையான உடல் வலி மூட்டுக்கு மூட்டு வலி இருப்பது கண்களுக்குள் அதீத வலி.
2. கூடவே வேறு அறிகுறிகள் ( இருமல் / சளி) இல்லாமல் இருப்பது.
3. மூன்று நாட்கள் மிக அதிகமான காய்ச்சல் பிறகு சட்டென்று குறைவது
4. அன்றாட வேலைகளைக் கூட செய்யவிடாமல் சாதாரண பாராசிட்டமால் மாத்திரைக்குக் கேட்காத அளவு காய்ச்சல் மற்றும் உடல் வலி
மேற்சொன்ன பிரச்சனைகள் இருந்தால் தயவு செய்து மருத்துவரைச் சந்தித்து சில காலம் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெறுவது கூட தவறே இல்லை.
இந்த சீஸனில் காய்ச்சல் வருகிறது என்றால், கை வைத்தியம் செய்வது, மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவது என்று இருந்துவிடாமல் மருத்துவரின் உதவியை நாடுவதே பாதுகாப்பு. ஏனென்றால், டெங்கு காய்ச்சலின்போது சிலருக்குத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். ரத்த உறைதலுக்குத் தேவையான தட்டணுக்கள் உடலில் குறையும்போது உடலின் உள்ளுறுப்புகளில் ரத்தப்போக்கு ஏற்பட ஆரம்பிக்கும். இதற்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா? அறிகுறிகளைச் சொல்லி நீங்களாகவே மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கிச் சாப்பிடும்போது, அவர்கள் வலி நிவாரண மாத்திரையும் சேர்த்தே தருவார்கள். இதன் விளைவாகவே, வயிற்றினுள்ளே ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிராபத்தும் நிகழலாம்.
டெங்கு குறித்த விழிப்புணர்வுடன் இருப்போம்… டெங்குவால் நேரும் உயிரிழப்புகளைத் தவிர்ப்போம்.''