டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி முன்னேறியது!
நடைபெற்று கொண்டிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் மிக முக்கியமான போட்டியில் நேற்று இந்தியா அணியும், வங்கதேச அணியும் அன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சற்று ரன்களை மெதுவாக எடுக்க ஆரம்பித்த தருணத்தில் ரோஹித் சர்மா 23 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
அதன்பின் விராட் கோலி 37 ரன்கள், சூரியகுமார் யாதவ் 6 ரன்கள் என தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது. அதற்கு பிறகு சிவம துபேவும், ரிஷப் பண்டும் இணைந்து சற்று ரன்களை எடுத்தனர். பின், சிவம் துபேவும், ஹர்திக் பாண்டியாவும் இணைந்து ரன்களை குவித்தனர். இதனால், இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தது. அதில், ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 27 பந்துக்கு 50 ரன்கள் எடுத்து அசத்தினார்.
அதனை தொடர்ந்து வங்கதேச அணி, பேட்டிங் களமிறங்கி விளையாடியது. தொடக்கத்தில் இருந்தே சற்று நிதானமாக விளையாடி, விக்கெட்டையும் இழந்ததால் மிடில் ஓவர்களில் ரன்ஸ் எடுக்க ஆளில்லாமல் தடுமாறியது.
மேலும், போக போக பந்து குறைவாகவும், ரன்கள் அதிகமாகவும் இருந்ததால் அடிக்க முயற்சித்து விக்கெட்டையும் இழந்து வந்தது வங்கதேச அணி. இதனால், வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்திய அணியில் குலதீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதனால், இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் இந்திய அணி அரை இறுதி சுற்றில் ஒரு காலை எடுத்து வைத்துள்ளது.
மேலும், இந்த தோல்வியின் மூலம் வங்கதேச அணி இந்த தொடரிலிருந்து வெளியேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.