செஸ் போட்டிகளில் இந்தியர்கள் ஆதிக்கம்!
பலருக்கும் பிரக்ஞானந்தா இந்தப் போட்டியில் இல்லையா? எப்படி குகேஷ் சாம்பியன் ஆனார் என்கிற சந்தேகம் இருக்கிறது. குகேஷ் சாம்பியன் ஆனது எப்படி என்பதையும், இப்போட்டியில் பிரக்ஞானந்தா இருந்தாரா என்பதையும் பார்ப்போமா? முதலில் இந்தியாவில் பிரக்ஞானந்தாவை விட சிறந்த தரநிலை கொண்டவர்கள் குகேஷூம், அர்ஜூனும் என்பதை நினைவில் வைக்கவும். உலகக்கோப்பை வென்ற அணியில் கோப்பையை கையில் ஏந்தியதே குகேஷ் தான். மற்றவர்களை தமிழக ஊடகங்கள் மிகைப்படுத்தி சொல்லாததால் நமக்குத் தெரியவில்லை.
பிரக்ஞானந்தா மட்டும் புகழ் வெளிச்சம் பெற அவருடைய அக்கா வைஷாலியும் பெண்கள் பிரிவில் அசத்தி வருவதும் ஒரு காரணமாக இருக்கிறது. இப்போது செஸ் சாம்பியன்ஷிப் விஷயத்துக்கு வருவோம். இப்போட்டியானது முந்தைய சாம்பியனுக்கும், அவரை எதிர்க்க அந்த வருடத்தின் சிறந்த செயல்பாடு கொண்ட வீரருக்கும் நடக்கும். அந்த சிறந்த செயல்பாடு கொண்ட வீரரை எப்படி தேர்வு செய்வார்கள் என்றால், உலகில் நடைபெறும் பல்வேறு தொடர்களின் வாயிலாக சிறந்த 8 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த 8 பேர் இடையே இரண்டு ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடைபெறுகிறது. இவர்களில் முதலிடத்தை பெறுபவரே நடப்பு சாம்பியன் உடன் மோத வேண்டும். அப்படி 8 பேர்களுக்குள் போட்டியிட்டு முதலிடத்தை பிடித்தவர் தான் குகேஷ். எட்டுப் பேரில் பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி என்ற இரண்டு இந்தியர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவுண்ட் ராபின் முடிவில் குகேஷ் 9 புள்ளிகளை பெற்றிருந்தார். 5 வெற்றி புள்ளிகளையும், 4 ட்ரா புள்ளிகளையும் (8 போட்டிகள் ட்ரா) பெற்றிருந்தார். ஒரே ஒரு போட்டியில் தோல்வியை தழுவினார்.இந்த எட்டுப் பேரிலும் குகேஷ் தகுதிப் பெற்றது சுவாரசியமான விஷயம் ஆகும். அவர் தகுதிப் பெற்ற பிரிவில் அவர் இரண்டாவது இடத்தையே பிடித்திருந்தார். அந்தப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்திருந்த வீரர் ஏற்கனவே வேறொரு பிரிவில் தகுதிப் பெற்றுவிட்டதன் காரணமாக, இரண்டாம் இடம் பெற்ற குகேஷ் தகுதிப் பெற்றார் .குகேஷ் அப்பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடிக்க சென்னை மாஸ்டர்ஸ் போட்டியில் அவர் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றதும் முக்கிய காரணமாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது.
இப்படியாகத்தான் பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி எல்லோரையும் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குச் சென்று டிங் லிரனையும் வீழ்த்தி உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்றிருக்கிறார். எல்லாவற்றையும் விட சுவாரசியமான விஷயம், இந்தியத் தரப்பில் தற்போது தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அர்ஜூன் எரிகேசி அந்த எட்டுப் பேரில் தகுதி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனையும் விட சுவாரசியமான விஷயம் தரவரிசையில் முதலிடத்தை வகிக்கும் மாக்னஸ் கார்ல்சன் எங்கே என்று தானே கேட்கிறீர்கள்? அவர் 2022 ஆம் ஆண்டோடு, இந்த பார்மட் நமக்கு செட் ஆகாதுப்பா என்று நடப்பு சாம்பியனாகவே விலகிக் கொண்டார். அவர் இந்த முறையும் 8 பேரில் ஒருவராக தேர்வாகியும் இந்த பார்மட்டில் சுவாரசியம் இல்லை என அவர் விலகிக் கொண்டார். அவர் இடத்தில் வேறு ஒரு வீரர் கலந்து கொண்டார். விஸ்வநாதன் ஆனந்த் சொன்னது போல செஸ் போட்டிகளில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தும் காலம் வந்துவிட்டது. தரவரிசைப் பட்டியலைப் பாருங்கள் வரிசைக் கட்டி நிற்கிறார்கள் இந்தியர்கள்.!