காலை உணவுத் திட்டம் அரசுக்கு செலவு இல்லை;முதலீடு- முதல்வர் பேச்சு!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ கடந்த 2022ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளான செப்.15ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டது.
இதன்மூலம் 1,545 பள்ளிகளை சேர்ந்த 1.14 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வந்தனர். இதனையடுத்து, இந்த திட்டத்தின் வரவேற்பின் காரணமாக கடந்தாண்டு அக்.25ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த இடமான திருக்குவளையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18.50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ‘முதல்வரின் காலை உணவு திட்டம்’ அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தாளான இன்று திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மொத்தமுள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் பயிலும் 2.23 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளனர்.
திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார். காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மாணவிகளுக்கு உணவை ஊட்டி மகிழ்ந்தார். முன்னதாக காமராஜரின் 122-வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி முதல்வர் மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”காலை உணவு திட்டம் மூலம் பெற்றோரின் பொருளாதார சுமையை அரசு குறைத்துள்ளது. இத்திட்டம் அரசுக்கு செலவு இல்லை. எதிர்கால தலைமுறையை உருவாக்குவதற்கான முதலீடு. இத்திட்டத்தின் மூலம் 20.73 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் சத்தான உணவை சாப்பிடுகிறார்கள்” என்றார்.
மேலும், “குழந்தைகள் பசியைப் போக்க கொண்டு வந்த திட்டம் தான் முதலமைச்சரின் காலை உணவு திட்டம். அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. பள்ளிக்கு, மாணவர்கள் பசியுடன் வரக்கூடாது. எமர்ஜென்சி குறித்து நாடாளுமன்றத்தில் இப்போது கேள்வி எழுப்பும் பாஜக அரசு, அந்த நேரத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வித்துறையை, மாநில பட்டியலுக்கு மாற்ற தயாராக இருக்கிறதா?” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “காலை உணவு திட்டத்தின் தரம் ஒரு துளி கூட குறையக்கூடாது. அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடிக்கடி இத்திட்டம் குறித்து திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.