தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

உணவு விரயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

09:42 PM Mar 29, 2024 IST | admin
Advertisement

ன்று மனிதகுலம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய ஒரு சமூக அநீதி. உலகின் 800 கோடி மக்கள் தொகையில் சுமார் 300 கோடி மக்கள் பசியுடன் உழன்று வருகின்றனர். அதாவது 40 சதவிகிதம் மக்கள் போதிய சத்தான உணவு இல்லாமல்தான் வாழ்ந்து வருகின்றனர். அதிலும் 82 கோடி மக்கள் தினமும் பசியுடன் தான் தூங்கச் செல்கின்றனர். இந்நிலையில்தான், கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் உலகளவில் சுமார் 105 கோடி மெட்ரிக் டன் உணவு வீணடிக்கப்பட்டதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

காட்டின் ராஜாவாக இருந்தாலும் சிங்கம் பசித்தால் மட்டுமே வேட்டையாடும். நாளைக்கும் மறு நாளுக்கும் என்று வாய்ப்புள்ள போது நான்கு மான்களையோ நானூறு முயல்களையோ அது வேட்டையாடி சேமித்து வைத்துக்கொள்வதில்லை. சிங்கத்தைப் போலவேதான் அநேகமாக மற்ற விலங்குகளும். ஆனால், மனிதன் மட்டும்தான் தொடர்ந்து வேட்டையாடிக் கொண்டே இருக்கிறான். இன்றைக்கு நாளைக்கு என்று நமது தேவைகளின் எல்லைகளும் சேமிப்பின் தேவைகளும் எந்தவொரு எல்லைக்குள்ளும் அடங்குவதில்லை. எனக்கு, எனது குழந்தைக்கு, எனது பேரனுக்கு என்று பரம்பரைக்கே சேர்த்து எப்போதும் வேட்டையாடிக் கொண்டே இருக்கிறோம். அந்த வேட்டையில் வீணாய்ப் போவதைப் பற்றி கவலைகொள்ள நமக்கு நேரமில்லை.

Advertisement

நான் சமைத்ததை அல்லது வாங்குவதை விரயம் செய்கிறேன்; அது எனது இலையோடு முடிந்துவிடும் சமாச்சாரம். எனது தனிப்பட்ட பிரச்சினை என்றுதான் அனேகர் நினைக்கின்றனர். ஆனால், உணவு விரயம் நமது தட்டோடும் இலையோடும் முடிந்துவிட கூடியதல்ல. உணவு விரயம் மனிதன் செய்யும் மிகப் பெரிய சமூக குற்றம் என்கிறது, பொருளாதார அறிவியல். காரணம், நிலத்திலிருந்து உணவுப் பொருள்கள் உற்பத்தியாகி, ஓர் எரிபொருள் மூலம் உணவாக உருவெடுத்து, தகுந்த பாதுகாப்பு, பகிர்வு எனப் பல கட்டங்களைக் கடந்து நமது இலைக்கு வருவதற்கு ஆகும் செலவு உணவு விரயமாக்குதலால் பல மடங்கு அதிகரிக்கிறது. அது நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கக்கூடியது. அந்த வகையில் இது குறித்து ஐ.நா.-வின் சுற்றுச்சூழல் திட்டப் பிரிவு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “கடந்த 2022-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 105 கோடி மெட்ரிக் டன் உணவு வீணடிக்கப்பட்டுள்ளது. இது, அந்த ஆண்டின் மொத்த உணவு உற்பத்தியில் 19 சதவீதம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி, ஒவ்வொரு நபரும் ஆண்டுதோறும் சுமார் 79 கிலோ உணவை வீணாக்குகின்றனர். உணவுப் பொருட்களை வீணாக்குவதில், வீடுகள் 60 சதவீதம் பங்கு வகிக்கின்றன. மேலும் சேவை நிறுவனங்கள் 28 சதவீத உணவுப் பொருட்களையும், சில்லறை விற்பனை நிறுவனங்கள் 12 சதவீத உணவுப் பொருட்களை வீணடிக்கின்றன.

2019-ஆம் ஆண்டில், உற்பத்தி செய்யப்பட்ட 93.1 கோடி மெட்ரிக் டன் உணவுப் பொருள் வீணடிக்கப்பட்டிருந்தது. இது மொத்த உணவு உற்பத்தியில் 17 சதவீதமாகும். இது தொடர்பான விவரம் 2021-ஆம் ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது. வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுவதை குறைக்கும் விதமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. வீடுகள், உணவு தொடர்பான சேவை நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளர்கள் அளிக்கும் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இப்படி ஆண்டுதோறும் பலகோடி டன் உணவுப் பொருட்கள் வீணாகின்றன என்றால், அதில் பெரும்பகுதி விளைவிக்கப்படும் நிலத்திலேயே வீணாகிறது என்கிறது ஐநா ஆய்வு. இதற்கு பருவநிலை மாற்றமும் ஒரு காரணம். அதேநேரம் உணவு விரயம் பருவநிலை மாற்றத்துக்கும் காரணமாகிறது. பரபரப்பான சூழலில் அனைவரும் மிச்சமான உணவை குப்பை தொட்டியில் வீசிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவோம். ஆனால், மிச்சமான உணவு, கெட்டுப்போன உணவு என நுகர்வோரால் பல வழிகளில் விரயம் செய்யப்படும் இந்த உணவு மறுபடியும் மண்ணுக்குத்தான் வருகிறது. அங்கு அது ‘மீத்தேன்’ எனும் பசுங்குடில் வாயுவை அபரிமிதமாக வெளியிடுகிறது. இது ஒரு வெப்ப வாயு. எனவே, புவி வெப்பமடைவதற்கு காரணமாகி பருவநிலை மாற்றங்களுக்கும் வழிவகுக்கிறது. ஆம், நமது பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க, சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் உணவு விரயத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

உணவை வீணாக்காமல் இருக்க, உணவுப் பொருட்களை வாங்கும்போதே தேவைக்கேற்ப வாங்குவது முதற்படி. குறிப்பாக வாங்குகின்ற பொருட்களை பட்டியலிட்டு, அந்த பட்டியலில் மிகவும் தேவையான பொருட்களை மட்டுமே வாங்கலாம். பழம், காய்கறி வகைகளை தேவைக்கேற்ப வாங்கி அவை கெடும் முன்னரே உபயோகிக்க வேண்டும். மீண்டும் சென்று பொருட்களை வாங்குவதற்கு முன்னால், கடந்த முறை வாங்கியுள்ள அனைத்து உணவு பொருட்களையும் சமைத்து விட்டோமா என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.

பழங்களையும் காய்கறிகளையும் பாதுகாப்பாக வைப்பது எப்படி என்று பலருக்கும் சரியாக தெரியாததாலேயே, சரியான நேரத்திற்கு முன்னரே அவை பழுத்து, அழுகி விடுகின்றன. எடுத்துக்காட்டாக, உருளைக்கிழங்கு, தக்காளி, வெள்ளைப்பூண்டு மற்றும் வெங்காயத்தை குளிர்பதன பெட்டியில் வைக்கக்கூடாது. அறையில் நிலவும் தட்பவெப்பத்தில்தான் வைக்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் இவற்றையும் குளிர்பதன பெட்டியில் வைத்துவிடுவார்கள். அதிகமாக சமைப்பதால், வழக்கமாகவே உணவுகள் மீதியாகும். குளிர்பதன பெட்டியில் வைத்திருக்கும் அந்த உணவை உண்டு முடிப்பதற்கு ஒரு நாளை ஒதுக்கலாம்.

அளவாய் சமைக்க வேண்டும். அதிகம் சமைத்துவிட்டால் அதை மீண்டும் முறையாக பயன்படுத்த வேண்டும். ‘பிடிக்கும் உணவு’ என்பதற்காக எல்லாவற்றையும் வாங்கி எல்லாவற்றிலும் கொஞ்சம் மிச்சம் வைப்பதற்கு மாற்றாக, தேவைக்கு வாங்கி, தேவைக்குச் சாப்பிட்டு, அப்படியும் மிச்சம் இருந்தால் குப்பைத் தொட்டிக்குள் வீசாமல், உணவு தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்துப் பழகும் பண்பை வளர்த்துக்கொள்வது உணவு விரயமாவதைத் தடுக்க சிறந்த வழி. உணவை பசியோடு இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றதும் மனிதர்களுக்கு தான் கொடுக்க வேண்டும் என்றில்லை பறவைகள், விலங்குகள், எறும்புகள் போன்ற பூச்சிகளுக்கு கூட அதை பகிர்ந்து கொடுக்கலாம். உணவை பழுதாக்காமல் எந்த உயிருக்காவது உணவளிப்பது மிகவும் உயர்வானது.

இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் விரயம் செய்யப்படும் உணவு மண்ணுக்கு போகவிடாமல் தடுத்து, அதை சேகரித்து, மறுசுழற்சி மூலம் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உதவும் உணவாக மாற்றிவிட முடியும். அல்லது மண்ணுக்கு உதவும் வகையில் இயற்கை உரமாக மாற்றியமைக்கவும் வழிசெய்யலாம். சில நாடுகள் விரயமாகும் உணவில் இருந்து சமையல் எரிவாயுவை தயாரிக்கின்றன. விரயமான உணவை, மறுபடியும் உதவும் உணவாக மாற்றியமைக்கும் முயற்சியில் தற்போது பல நாடுகளும் இறங்கியுள்ளது.

விரயம் செய்யப்படும் உணவைத் தடுப்பதிலும் அதை மறுபடியும் பயன்படுத்துவதிலும் உலக நாடுகளில் டென்மார்க்கும் நெதர்லாந்தும் முன்னிலை வகிக்கின்றன. இந்த நாடுகள், சமூக நிகழ்வுகளில் உணவு விரயம் செய்யப்படுவதைத் தடுக்க கண்காணிப்புப் படைகளையே அமைத்துள்ளன. விரயமான உணவை மறுபடியும் உதவும் உணவாக மாற்றும் முயற்சியில் தென் ஆப்பிரிக்காவும் இறங்கியுள்ளது.

விரயம் செய்யப்படும் காய்கறி மற்றும் பழங்களில் ‘பிஎஸ்எஃப்’ பூச்சியின லார்வாக்கள் அபரிமிதமாக வளர்கின்றன. இவை அந்த உணவுக் கழிவுகளில் வினைபுரிந்து, அவற்றைப் புரதம் நிறைந்த உணவாக மாற்றியமைத்துவிடும். இது கோழி வளர்ப்புக்கும் மீன் வளர்ப்புக்கும் பயன்படக்கூடியது. இதன் அடிப்படையில், சிறு தொழில்களைத் தென் ஆப்பிரிக்கா அதிக எண்ணிக்கையில் தொடங்கியுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தை உலகில் மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று ஐநாவின் உணவுக் கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் திட்டத் தலைவர் மார்ட்டினோ ஆட்டோ கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவும் தமிழ்நாடும்கூட இதைப் பின்பற்ற வேண்டும். ஆனால், இது அரசாங்கத்தால் மட்டும் சாத்தியமானது அல்ல. உணவு விரயத்தை தடுக்க ஒவ்வொரு தனி நபரும் பங்காற்ற வேண்டும்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
endfood waste!
Advertisement
Next Article