உங்களின் குரலாக ஒலிப்பேன்.!- பிரியங்கா காந்தி உறுதி!
நடப்பு ஆண்டில் முன்னதாக நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு மற்றும் ரேபர் அலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதியிலிருந்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது அதில் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டார். அதேநேரம், அவரை எதிர்த்து எல்.டி.எஃப் கூட்டணி சார்பில் சத்தியன் மோகரியும், என் டி ஏ சார்பில் நவ்யா ஹரிதாசும் போட்டியிட்டனர். இந்த நிலையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.
அதில் காலை முதலே பிரியங்கா காந்தி மற்ற வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்று வருகிறார். தற்போது வரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பிரியங்கா காந்தி 6 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளார். இதன் மூலம் பிரியங்கா காந்தி வயநாட்டின் புதிய எம்பி பதவி ஏற்பது உறுதியாகியிருக்கிறது. மேலும் கேரளா வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தலில் சகோதரனின் சாதனையை முறியடித்துள்ளார். பல எதிர்பார்ப்புகளை மீறி அவர் வயநாட்டில் 4,10,931 (4 லட்சத்து 10 ஆயிரத்து 931) வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி முகம் கண்டுள்ளார்.
இந்த நிலையில் வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “எனது அன்புக்குரிய வயநாடு சகோதர, சகோதரிகளே! என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால் நான் நன்றியில் முழ்கித் திழைக்கிறேன். காலப்போக்கில் எனது இந்த வெற்றியை உண்மையில் உங்களின் வெற்றியாக நான் உணரச் செய்வேன். உங்களை பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுத்த நபர் உங்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் புரிந்து கொண்டவர், உங்களில் ஒருவராக உங்களுக்காக போராடுகிறார் என்பதையும் உணரச் செய்வேன். நாடாளுமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிப்பேன். இந்த மரியாதையை நீங்கள் எனக்கு அளித்ததற்கும், நீங்கள் எனக்கு அளித்த அளவு இல்லாத அன்புக்கும் நன்றி.
ஐக்கிய இடது முன்னணியில் உள்ள எனது சகாக்கள், கேரளா முழுவதும் உள்ள தலைவர்கள், தொண்டர்கள், தன்னார்வலர்கள், இந்த பிரச்சாரத்தில் நம்பமுடியாத அளவுக்கு உழைத்த எனது அலுவலக சகாக்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி. நாளென்றுக்கு 12 மணி நேர (உணவு தூக்கம் இல்லாமல்) கார் பயணம் என்ற எனது அழுத்தத்தை, நாம் நம்பும் ஒரு சித்தாந்ததுக்காக உண்மையான வீரர்களைப் போல போராடியதற்காகவும் நன்றி.
எனது தாய், ராபர்ட் மற்றும் எனது இரண்டு தங்கங்கள் ரைஹான் மற்றும் மிராயா; நீங்கள் எனக்கு அளித்த தைரியம் மற்றும் அன்புக்கு எந்த நன்றியும் போதாது. மேலும் எனது சகோதரன் ராகுல்... இவர்கள் எல்லோரையும் விட நீ துணிச்சலானவன். எனக்கு ஒரு பாதையைக் காட்டியதற்காகவும், எப்போதும் எனது பலமாக இருப்பதற்கும் நன்றி" என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.