ஆஸ்திரேலிய ஓபன்: முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2024 தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் அபார வெற்றி பெற்று தன் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.தன் 22 வது வயதில் இத்தாலியை சேர்ந்த ஜானிக் சின்னர் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெற்றி பெற்று சாதித்து இருக்கிறார்.
மெல்போர்னில் நடைபெற்று வந்த ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தரவரிசையில் 3-ம் நிலை வீரரான டேனியல் மெத்வதேவ் (ரஷியா),தர வரிசையில் 4-ம் நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இரண்டு செட்களை 6-3, 6-3 என்ற கணக்கில் மெத்வதேவ் கைப்பற்றினார். இதையடுத்து சின்னர் 6-4, 6-4, 6-3 என்ற கணக்கில் அடுத்த மூன்று செட்களையும் கைப்பற்றினார். இந்த நிலையில் ஜானிக் சின்னர் 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தன்வசப்படுத்தினார் சின்னர்.
இந்தப் போட்டியில் முதல் இரண்டு செட்களையும் டேனில் கைப்பற்றி ஜானிக்-க்கு நெருக்கடி கொடுத்தார்.ஆனாலும் மனம் தளராமல் எழுச்சியுடன் விளையாடிய ஜானிக் சின்னர் கடைசி மூன்று செட்களையும் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளார். உலக டென்னிஸ் தரவரிசையில் ஜானிக் சின்னர் நான்காவது இடத்திலும், டேனில் மெட்வெடேவ் மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.