அமர்நாத் யாத்திரை: முதல் அணி புறப்பட்டது!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். தெற்கு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகை கோயில். குகைக்குள் 40 மீ உயரத்தில் உள்ள சிவலிங்கம் மூலம் இந்த குகை முக்கியத்துவம் பெறுகிறது. குகையின் மேற்கூரையில் இருந்து பனிக்கட்டி வடிந்ததால் உருவான ஸ்லாக்மைட் என அறிவியல் கூறினாலும், இந்துக்கள் இது லிங்க வடிவில் சிவபெருமான் இருப்பதாக உறுதியாக நம்புகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு யாத்திரை நேற்று (ஜூன்28) துவங்கியது. காஷ்மீரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து 2 குழுக்கள் யாத்திரைக்கு புறப்பட்டு சென்றன.ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஜம்முவில் உள்ள யாத்ரி நிவாஸ் அடிப்படை முகாமில் இருந்து, அமர்நாத் யாத்திரையின் முதல் அணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் 4,603 யாத்ரீகர்களுடன் வருடாந்திர அமர்நாத் யாத்திரையின் முதல் அணி இன்றைய தினம் காஷ்மீர் பள்ளத்தாக்கை அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். யாத்திரை தொடரணி காஷ்மீர் செல்லும் வழியில் மாநில நிர்வாகத்தினர் மற்றும் மக்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பைப் பெற்றது. மேலும் குல்காம், அனந்த்நாக், ஸ்ரீநகர் மற்றும் பந்திபோரா மாவட்டங்களில் யாத்ரீகர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
அனந்த்நாக்கில் உள்ள பாரம்பரிய 48 கிமீ நுன்வான்-பஹல்காம் பாதை மற்றும் கந்தர்பாலில் 14 கிமீ பால்டால் பாதை வாயிலாக, 52 நாள் யாத்திரை ஆகஸ்ட் 19 அன்று நிறைவடைய உள்ளது. முன்னதாக தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள காசிகுண்ட் பகுதியில் உள்ள நவயுக சுரங்கப்பாதை வழியாக 231 இலகுரக மற்றும் கனரக வாகனங்களின் உதவியோடு யாத்ரீகர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை அடைந்தனர்.
பால்டால் மற்றும் பஹல்காமில் உள்ள அடிப்படை முகாம்களுக்கு யாத்ரீகர்கள் தனித்தனியாக புறப்பட்டு அங்கிருந்து 3,880 மீட்டர் உயரமுள்ள அமர்நாத் குகை கோயிலுக்கு புறப்படுகிறார்கள். அனந்த்நாக்கில் பஹல்காம் வழியாக செல்லும் யாத்ரீகர்களை துணை ஆணையர் சையத் ஃபக்ருதீன் ஹமீத் மற்றும் பிற அதிகாரிகள் வரவேற்றனர். பால்டால் வழியாக கோயிலுக்குச் செல்லும் யாத்திரிகர்களை ஸ்ரீநகரில் உள்ள பாந்தா சௌக்கில் துணை ஆணையர் பிலால் மொகி உத் பட் வரவேற்றார்.
மூன்றடுக்கு பாதுகாப்பு, விரிவான வழித்தடங்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் யாத்திரையை சுமூகமாக நடத்துவதற்கு செய்யப்பட்டுள்ளன. "அமர்நாத் யாத்ரிகர்களின் வெற்றிகரமான பயணத்துக்காக ஜூன் 28 முதல் ஆகஸ்ட் 19 வரை பல்வேறு வழித்தடங்களில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். பயணத்தின் சிரமத்தைக் குறைக்க தினசரி ஆலோசனைகள் வழங்கப்படும்" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு யாத்திரைக்கு 3.50 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமர்நாத் குகைக் கோயிலுக்குச் செல்லும் இரண்டு வழிகளிலும், 6,000 தன்னார்வலர்களால் பராமரிக்கப்படும் 125 சமூக சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன.