அதோ முகம் - விமர்சனம்!
ரீல் பெட்டி தயாரிப்பில் சித்தார்த் நாயகனாக நடிக்க, சைதன்யா பிரதாப், அனந்த நாக், கவுரவத் தோற்றம் அருண் பாண்டியன் நடிப்பில் சுனில் தேவ் எழுதி டைரக்ட் செய்து இருக்கும் படம். தமிழில் பக்காவான ஸ்கீரின் பிளேயுடன் திரில்லர் திரைப்படங்கள் வருவதில்லை என்ற ஏக்கத்தை குறைக்கவந்திருக்கும் படம் அதோ முகம். மினிமம் கேரக்டர்களை வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள் யூகிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்த ஒரு கதைக்களத்தை மிக சுவாரஸ்யமான க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுனில் தேவ்.
கதையாகப்பட்டது ஹீரோ எஸ்.பி.சித்தார்த், தனது காதல் மனைவி நாயகி சைதன்யா பிரதாப்புடன் ஊட்டியில் வசித்து வருகிறார். மனைவிக்கு சர்ப்பிரைஸ் கொடுப்பதற்காக அவரது செல்போனில் அவருக்கே தெரியாமல் ஆப் ஒன்றை பொருத்தி, அதன் மூலம் அவரது நடவடிக்கைகளை பதிவு செய்து, அதை வீடியோ தொகுப்பாக உருவாக்கி பரிசளிக்க முடிவு செய்கிறார். அதன்படி அவர் பொருத்தும் ஆப் மூலம் மனைவியின் செல்போனை ஹேக் செய்து அவரது நடவடிகைகளை பதிவு செய்யும் போது, அவரது மனைவியின் நடவடிக்கை அவருக்கு பேரதிர்ச்சியை கொடுக்கிறது. எதுவுமே புரியாமல் மனைவியை பின் தொடரும் நாயகனுக்கு அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொடுக்கிறது. தன் மனைவியை வைத்து தன்னை சுற்றி பின்னப்பட்டுள்ள சதிவலைப் பற்றி தெரிந்துக் கொள்ளும் சித்தார்த், அதில் இருந்து தன்னையும், தனது மனைவியையும் காப்பாற்றிக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். ஆனால், அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் அவரை அடுத்தடுத்த ஆபத்தை நோக்கி பயணிக்க வைக்க, இறுதியில் நினைத்துப் பார்க்க முடியாத பேராபத்தில் சிக்கிக்கொள்பவர் அதில் இருந்து மீண்டாரா? இல்லையா? என்பதே ‘அதோமுகம்’ படத்தின் கதை.
நாயகன் எஸ்.பி.சித்தார்த் புதுமுகம் என்றாலும் சகல உணர்வுகளை வெளிப்படுத்தி அட்டகாசாமாக நடித்திருக்கிறார். குழந்தை குணம் மாறாத அப்பாவியான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் சித்தார்த், கட்டிய மனைவியே தனக்கு எதிராக சதி செய்கிறாரோ என்று எண்ணும் குழப்பமான மனநிலை, கோபமடைந்தாலும் அதை வெளிக்காட்ட முடியாமல் தவிப்பது, நடப்பவை அனைத்தும் தெரிந்தும் எதுவும் செய்ய முடியாமல் நிற்பது, என்று திருப்பங்களுக்கு ஏற்றவாறு நடிப்பில் வேறுபாட்டைக் காட்டி அசத்துகிறார். ஹீரோயினாக நடித்திருக்கும் சைதன்யா பிரதாப், ஆரம்பத்தில் அப்பாவித்தனமாக இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் தனது நடவடிக்கைகள் மூலம் மிரட்டுகிறார். எல்லாமே கணவருக்காக தான் செய்கிறார், என்று அவர் மீது இறக்கம் ஏற்பட்டாலும், திடீரென்று அவர் எடுக்கும் விஸ்வரூபம் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது.
படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு எல்லாம் படத்திற்கு இன்னும் பலம் கூட்டி இருக்கிறது.
கொஞ்சம் சிம்பிளான கதைக் கொண்டப் படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை தான். படத்தின் லொகேஷன் படத்திற்கு ஒரு மிகப்பெரிய பலம். ஊட்டியில் நடைபெறும் கதை அந்த இடத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறது..படத்தின் பட்ஜெட் சிறிதாக இருந்தாலும், திரைக்கதை, மேக்கிங், நடிப்பு, என அத்தனையிலும் கொஞ்சம் கூடுதலான உழைப்பை தந்து நம்மை பாராட்ட வைத்திருக்கிறார்கள் பட குழுவினர்.
மொத்தத்தில் அதோ முகம்- தமிழில் ஒரு குறிஞ்சி திரில்லர் சினிமா
மார்க் 2.5/5