அதானி குழுமம் UPI சேவையில் களமிறங்க முடிவு?
மோடியின் தயவும், ஆசியும் பெற்றவர் என்று வர்ணிக்கப்படும் அதானி குழுமம் UPI சேவையில் களமிறங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அதானி குழுமத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், யுபிஐ பரிவர்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பேடிஎம் செயலி நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க அதானி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாடா, கூகுள் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்துக்கு இணையாக, டிஜிட்டல் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்த, அதானி குழுமம் முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது.அதன் வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், மின்னணு வர்த்தகம் மற்றும் ஆன்லைன் பேமென்ட், கிரெடிட் கார்டு உள்ளிட்ட துறைகளில் நுழைய உள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.
'அதானி ஒன்' எனும் நுகர்வோர் செயலி ஒன்றை ஏற்கனவே அறிமுகம் செய்திருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக யு.பி.ஐ., செயலிக்கான உரிமம் பெறுவதற்காக பேச்சு நடத்தி வருகிறது. அத்துடன் முன்பு அறிவித்திருந்த 'அதானி கிரெடிட் கார்டு' திட்டத்தை செயல்படுத்த, வங்கிகளுடன் இறுதிக் கட்ட பேச்சில் ஈடுபட்டு வருகிறது.இவைதவிர, டிஜிட்டல் வர்த்தகத்திற்கான அரசின் 'ஓ.என்.டி.சி.,' எனும் பொது வர்த்தக தளத்தை பயன்படுத்தி, ஆன்லைன் ஷாப்பிங் வசதியை வழங்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டங்கள் இறுதி செய்யப்படும் நிலையில், இந்த சேவைகள் அனைத்தும் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட 'அதானி ஒன்' நுகர்வோர் ஆப் வாயிலாக வழங்கப்படும்.
ஆரம்பகட்டமாக அதானி குழுமத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் அதன் விமான நிலையங்களில் பயணிக்கும் பயணியர்களுக்கு இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.