அசூர வளர்ச்சி அடையும் ஆப்பிள் ஐ பேட் கதையிது!
கடந்த ஜனவரியோடு, தனது பயணத்தில் பதினைந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது ஆப்பிள் ஐபேட். கைக்கணினி (Tablet Computer) என்ற கருத்தாக்கம் அறுபதுகளிலேயே தோன்றிவிட்டது. எண்பதுகளில் சில கைக்கணினிகள் பயன்பாட்டுக்கும் வந்திருந்தன. ஆனால், அவற்றைத் திரும்பிப்பார்க்கத்தான் அன்றைக்கு ஆளில்லை.எல்லாம் 2010ஆம் ஆண்டு வரைதான். ஐபேடின் வருகை, கைக்கணினித் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இன்று பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கைக்கணினிகளைத் தயாரிக்கின்றன. அதற்கான பாதையை வகுத்தது ஆப்பிள் நிறுவனம். ஐபேட் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் அதன் வாழ்க்கைச் சித்திரம் நமக்குத் தெரியக்கூடும்.
ஜனவரி, 2010இல் ஒரு நாள் அது. ‘ஐபோன் உங்கள் பாக்கெட்டுகளில் இருக்கிறது. மேக்புக் உங்கள் மேசைகளின் மீதிருக்கிறது. இவற்றிற்கு இடையேயிருக்கும் இடைவெளியை ஐபேட் நிரப்பும்’ என்றார் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்.9.7 அங்குலத் திரை, பத்து மணி நேர மின்கல ஆயுள், 64 கிகா பைட்டு சேமிப்பு வெளி – இவைதான் ஐபேட் முதல் பதிப்பின் அம்சங்கள். விலை, ஐந்நூறு டாலர்களுக்கு ஒரு டாலர் குறைவு. இந்தக் கருவியில் படம் எடுக்கும் வசதிகூட இருந்திருக்கவில்லை. ஆனால், சந்தைக்கு அறிமுகமான சில நாள்களிலேயே மூன்று லட்சம் ஐபேட்கள் விற்றுத் தீர்ந்தன. இந்த எண்ணிக்கை ஒரு மாதத்தில் பத்து லட்சத்தை எட்டியது. அந்த ஆண்டின் இறுதியில், மேக் கருவியின் விற்பனையை முறியடித்தது ஐபேட்.
2011 முதல் 2015 வரையிலானக் காலக்கட்டத்தில், ஐபேட் 2, ஐபேட் 3, ஐபேட் 4 என அடுத்தடுத்துப் புதிய பதிப்புகளைக் கண்டது ஐபேட். ஒரு கைக்கணினி எப்படி இருக்கவேண்டும் என்ற ஆப்பிளின் கருத்தாக்கத்திற்கு உயிர் கொடுத்தது ஐபேடின் இரண்டாவது பதிப்பு. எடை குறைவாக, மெல்லியதாக, இரட்டை மைய A5 சில்லு (Dual Core A5 Chip) கொண்டதாக இது இருந்தது. அனைத்தினும் முக்கியமாக, முன்னாலும் பின்னாலும் படக்கருவிகள் கொண்ட முதல் ஐபேட் இதுதான்.
2012இல் அறிமுகமான ஐபேடின் மூன்றாவது பதிப்பு, அதற்கு முந்தைய பதிப்பைவிட நான்கு மடங்கு அதிக படவணு (Pixel) எண்ணிக்கை கொண்டது. ஐபேட் 3–ல் இணைக்கப்பட்ட ரெட்டினல் திரையால் இது சாத்தியமானது.நான்காவது தலைமுறை ஐபேடில்தான் முதன்முறையாக ஆப்பிளின் பிரத்யேக முத்திரையான மின்னல் இணைப்பு முனையம் (Lightning Port) அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அப்போதைய சூழலுக்கு இந்த முப்பது முனை இணைப்பி (30-pin connector) மக்களிடம் பிரபலமாகவில்லை. இதற்கு முந்தைய ஐபேட் பதிப்புகளில் இதனைப் பயன்படுத்த முடியாதது முக்கியக் காரணம். தான் அகலக்கால் வைத்துவிட்டதை ஆப்பிள் உணர்ந்தது. ஐபேட் 4-ன் தேக்கத்திற்குப் பின் அதைத் திரும்பப்பெற்று, சந்தை சாதகமானதும் 2014இல் மீண்டும் களமிறக்கியது ஆப்பிள் நிறுவனம்.
இருப்பினும், இந்த இடைப்பட்ட நேரத்தில் ஆப்பிள் நிறுவனம் சும்மா இருந்துவிடவில்லை. ஐபேட் மினி என்ற புதிய கருவியைக் களமிறக்கியது. ஐபேட் 2–ன் அம்சங்களுடன் 7.9 அங்குலம் கொண்ட சிறிய திரையுடன் இது அறிமுகமானது. கூடவே, 2013இல் ஐபேட் ஏர் என்ற கருவியும் அறிமுகமானது. குறைந்த எடை, மெல்லிய வடிவமைப்பு போன்ற இதனுடைய இலகுத்தன்மையே ‘ஏர்’ என்ற இதன் பின்னொட்டுக்குக் காரணம். இரண்டாம் தலைமுறை ஐபேட் ஏரும் மூன்றாம் தலைமுறை ஐபேட் மினியும் 2014இல் அறிமுகமாயின. இந்த கருவிகளில் முதல்முறையாக தொடு அடையாள (Touch ID) வசதி புகுத்தப்பட்டது.
2015இல் ஐபேட் புரோ களமிறக்கப்பட்டது. 12.9 அங்குல அளவில் பெரிய திரை மற்றும் 4 கிகா பைட்டு அளவில் நேரடி அணுகல் நினைவகம் (RAM) கொண்டது இது. இதே காலக்கட்டத்தில் நான்காவது தலைமுறை ஐபேட் மினியும் பயன்பாட்டுக்கு வந்தது. முதன்முதலாக இதில்தான் ஆப்பிள் பென்சில் எனப்பட்ட திரையில் எழுதும் எழுத்தாணி (stylus) இணைக்கப்பட்டது.
2016இல் ஐபேட் புரோவின் திரை 9.7 அங்குல அளவாகக் குறைக்கப்பட்டது. இந்த ஐந்தாண்டுகளில் ஆப்பிள் தன்னுடைய ஐஓஎஸ் இயக்குதளத்தைக் கைபேசிகளுக்கானது என்றும் கைக்கணினிகளுக்கானது என்றும் பிரித்தது. இந்தப் பிரிகை சில ஆண்டுகளாகவே பயன்பாட்டில் இருந்தாலும் 2019இல்தான் கைக்கணினிக்கான இயக்குதளமாக ஐபேட்ஓஎஸ் முறையாக அறிவிக்கப்பட்டது.
நான்காம் தலைமுறை ஐபேட் அறிமுகப்படுத்தப்பட்டு நீண்ட இடைவெளிக்குப்பின், 2017இல் ஐந்தாவது தலைமுறை ஐபேட் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து, 2018இல் ஐபேட் புரோ புதுப்பிக்கப்பட்டது. இது ஒரு பெரிய புதுப்பிப்பாக அமைந்தது. திரையில் முக அடையாள (Face ID) வசதி இணைக்கப்பட்டது. பாரம்பரியமான மின்னல் இணைப்பு முனையம், C-வகை இணைப்பியால் பதிலீடு செய்யப்பட்டது. மேலும், ஆப்பிள் பென்சிலின் அடுத்த தலைமுறையும் இதில் இணைக்கப்பட்டிருந்தது. இது காந்தமுனை கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
A12 பயோனிக் சில்லுத்தொகுதி (Chipset), திரவ ரெட்டினா திரை, புதுப்பிக்கப்பட்ட படக்கருவி போன்றவை இதன் கவர்ச்சிகரமான அம்சங்கள். மற்றொரு சிறப்பாக, 1 டெரா பைட்டு அளவுக்குப் பிரம்மாண்டமான சேமிப்பு வெளியும் இதில் வழங்கப்பட்டிருந்தது.2017இல் வெளியான, ‘ஒரு கணினி என்பது என்ன?’ என்ற ஆப்பிளின் விளம்பரம் மிகப் பிரபலமானது. அதன் தாக்கமோ என்னவோ. 2020இல் கைக்கணினி என்ற நிலையைத்தாண்டி ஒரு கணினியாகவே தன்னைத் தகவமைத்துக்கொண்டுவிட்டது ஐபேட். அதற்கு iPadOSஇன் 13.4 புதுப்பிப்பு முக்கியமான காரணமாக அமைந்தது. இந்தப் புதுப்பிப்பு, திறன் விசைப்பலகை (Smart Keypad) மற்றும் தொடுபலகை (Touchpad) அம்சங்களைக் கொண்டுவந்தது. எனவே, சுட்டல் கருவிகளுக்கான (Pointing Devices) முழு ஆதரவை நல்குபவையாக மாறின ஐபேட்கள். இதனால் ஆப்பிள் ஐபேட்கள் மடிக்கணினிகளுக்குப் போட்டியாயின.
2021 முதல் தற்போது வரை
இந்தக் காலக்கட்டத்தில் ஐபேட் புரோ சாதனங்கள் ஆப்பிள் சிலிகான் M–வரிசை செயலாக்கிகளைப் (Processors) பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தன. 2023ஆம் ஆண்டு, தன்னுடைய எந்த ஐபேட் கருவிக்கும் ஆப்பிள் புதுப்பிப்புகள் தரவில்லை. எனவே, ஐபேட்களை ஆப்பிள் நிறுத்த எண்ணியிருக்கிறது என்ற தகவல் பரவியது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. ஏற்கெனவே ஐபேட்களில் இருக்கும் வசதிகள், வன்பொருள்கள், மென்பொருள்கள் போன்றவை சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, சீரான இடைவெளியில் மேம்படுத்தப்பட்டும் புதுப்பிக்கப்பட்டும் வருகின்றன.
2023இல் பத்தாவது தலைமுறை ஐபேட் கருவி, A14 பயோனிக் சில்லுத்தொகுதியுடன் மேம்படுத்தப்பட்டது. 2024இல் ஐபேட் புரோவின் திரைகள், கரிம ஒளியுமிழ் இருமுனையத் (OLED) திரைகளாக மாற்றப்பட்டன. M4 வகை செயலாக்கியும் முதன்முறையாக இதில் இணைக்கப்பட்டது. இந்த மேம்பாடுகள் மக்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுத்தந்தன.
சென்ற ஆண்டில், ஐபேட் ஏர், அதனுடைய பாரம்பரியமான திரையளவுடன் மற்றொரு திரையளவையும் கொண்டுவந்தது. புதிய திரையளவு 13 அங்குலம் என்பது குறிப்பிடத்தக்கது. புரோ வரிசையில் இல்லாத ஒரு கருவியின் அதிகபட்சத் திரையளவு இதுதான். இதே ஆண்டில், ஏழாவது தலைமுறை ஐபேட் மினி, A17 செயலாக்கியுடன் சந்தைக்கு இறக்குமதியானது. ஐபேடுக்கு இந்த ஆண்டின் முற்பகுதியில் புதுப்பிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தேதியில் ஐபேட் புரோ, கைக்கணினிகளின் தரவரிசையில் உச்சத்தில் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஐபேட் ஏரும் கைக்கணினிகளின் சந்தை மதிப்பில் கணிசமான பகுதியைப் பகிர்ந்துகொள்கிறது. தொடர்ந்து, தொழில்நுட்ப உலகில் அறிமுகமாகும் புதிய அம்சங்களை ஆப்பிள் கைக்கணினிகளில் அவ்வப்போது புகுத்திவருகிறது ஆப்பிள் நிறுவனம்.இன்றும் கைக்கணினிக் காதலர்களின் முதன்மைத் தேர்வாக ஆப்பிளின் ஐபேட்கள் உள்ளன என்பது கண்கூடு. ‘வயது வெறும் எண்தான்’ என்ற சொலவடை ஐபேட்களுக்கு மிகப்பொருத்தமாக உள்ளதல்லவா?